குடும்ப மகிழ்ச்சிக்கு
பணத்தை நிர்வகிப்பது எப்படி?
கணவர்: “என் மனைவி லாவன்யா, a வேண்டாத சாமான்களுக்கெல்லாம் பணத்தை இஷ்டம்போல் செலவழிக்கிறாள், என்னைப் பொறுத்தவரை அதெல்லாம் எங்களுக்குத் தேவையே இல்லை என நினைக்கிறேன். பணத்தை எப்படி மிச்சம் பிடிப்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை! எதிர்பாராத செலவுகள் கையைக் கடிக்கும்போதுதான் இது ஒரு பெரிய பிரச்சினையாக வெடிக்கிறது. அவள் கையில் இரண்டு காசு இருந்தால், அதை உடனடியாகச் செலவழித்து விடுவாள் என்பதை அவளிடமே பல முறை சொல்லியிருக்கிறேன்.”
மனைவி: “பணத்தை எப்படிச் சிக்கனமாகச் செலவு செய்வதென எனக்குச் சுத்தமாகத் தெரியவில்லை என்றே வைத்துக்கொள்ளுங்களேன்; ஆனால், சாப்பாட்டுக்கு, தட்டுமுட்டு சாமான்களுக்கு, வீட்டுச் செலவுகளுக்கு எல்லாம் எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்று அவருக்குக் கொஞ்சம்கூட தெரியாது; வீட்டில் கிடக்கிற எனக்குத்தான் அதைப் பற்றி நல்லாவே தெரியும். எங்களுக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியும்; அதனால், இன்னொரு சண்டை வெடித்தால்கூட அதை வாங்கியே தீருவேன்.”
கணவன் மனைவிக்கிடையே சலசலப்பை ஏற்படுத்துகிற பெரிய விஷயங்களில் ஒன்றுதான் பணம். ஆகவே, தம்பதியருக்கிடையில் சர்வசாதாரணமாக வருகிற வாக்குவாதங்களுக்குக் காரணமானவற்றில் பணம் முதலிடத்தைப் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
தம்பதியரிடம் பணத்தைக் குறித்த சமநிலையான கருத்து இல்லாவிட்டால் நிம்மதி பறிபோய் விடலாம், சண்டை வரலாம், உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும்கூட பாதிப்பு ஏற்படலாம். (1 தீமோத்தேயு 6:9, 10) பணத்தைச் சரியாக நிர்வகிக்கத் தெரியாத பெற்றோர்கள் இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகலாம்; இதனால், தங்களுடைய பிள்ளைகளுக்கும் ஒருவருக்கு ஒருவரும், உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் உதவ முடியாமல் போகலாம். அதனால், பண விஷயத்தில் ஞானமாய் நடந்துகொள்ள பிள்ளைகளுக்கும் அவர்களால் கற்றுக்கொடுக்க முடிவதில்லை.
“பணம் பாதுகாப்பு தரும்” என்று பைபிள் ஒத்துக்கொள்கிறது. (பிரசங்கி 7:12, NW) ஆனால், பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பதை மட்டுமின்றி, அதைப் பற்றி உங்கள் துணையிடம் எப்படிப் பேசுவது என்பதையும் கற்றுக்கொண்டால்தான் அது உங்கள் திருமண பந்தத்தையும் குடும்பத்தையும் பாதுகாக்கும். b சொல்லப்போனால், பண விஷயங்களைப் பற்றி கலந்துபேசுவது வாய்ச் சண்டையில் முடிவடைவதற்குப் பதிலாக உண்மையில் தம்பதியரின் பந்தத்தைப் பலப்படுத்தலாம்.
ஆனாலும், மண வாழ்வில் பணத்தால் நிறைய பிரச்சினைகள் வருவதற்குக் காரணம் என்ன? பண விஷயத்தைப் பற்றி பேசுவது குடும்பத்தை இரண்டுபடுத்தாமல் ஒன்றுபடுத்துவதற்கு நீங்கள் என்னென்ன பயனுள்ள படிகளை எடுக்கலாம்?
சவால்கள் என்னென்ன?
பொதுவாக, பண விஷயத்தில் சண்டை வருவதற்குக் காரணம் காசைச் செலவு செய்வது அல்ல, ஆனால், நம்பிக்கையின்மையும் பயமும்தான். உதாரணமாக, ஒரு கணவர் தன் மனைவி செலவழிக்கிற ஒரு ரூபாய்க்குக்கூட கணக்குக் கேட்கிறார் என்றால், குடும்பத்தின் வரவு செலவைக் கவனிக்க அவளால் முடியும் என்பதில் அவருக்குத் துளிகூட நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறார். அவ்வாறே, தன் கணவர் பணத்தைச் சேமிப்பதே இல்லையென ஒரு மனைவி குறை சொல்கிறாள் என்றால், நாளைக்கு ஒரு பெரிய பணச் செலவு வரும்போது அதனால் குடும்பம் பாதிக்கப்படுமோ என்ற தன் பயத்தையே வெளிக்காட்டுகிறாள்.
தம்பதியருக்கிடையே பண விஷயத்தில் தகராறு வருவதற்கு மற்றொரு காரணம் அவர்கள் வளர்ந்த விதம். “என் மனைவியின் வீட்டில் பணத்தை நன்கு நிர்வகித்து செலவு செய்வார்கள்” என்கிறார் மணமாகி எட்டு வருடங்களான மனோகர். “அதனால், பண விஷயத்தில் எனக்கிருக்கிற பயம் அவளுக்கு இருப்பதில்லை. என்னுடைய அப்பா ஒரு குடிகாரர், எப்போதும் புகைபிடித்துக்கொண்டே இருப்பார், நிறைய நாள் வேலை இல்லாமல் வீட்டில் இருப்பார். நாங்கள் அடிக்கடி சாப்பாட்டுக்குத் திண்டாடினது உண்டு. அதனால், கடன்பட்டு விடுவோமோ என்ற பயம் எனக்கு
எப்போதும் இருந்தது. இந்தப் பயத்தால், சில சமயங்களில் என் மனைவியிடம் பண விஷயத்தில் நியாயமற்று நடந்துகொள்வேன்” என்கிறார். பணப் பிரச்சினை வருவதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், பணம் உங்களுடைய மண வாழ்க்கைக்கு ஆபத்தாக இல்லாமல் ஆதரவாக இருப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?உங்களுக்கு அதிமுக்கியமானது எது—பணமா, திருமண பந்தமா?
வெற்றிக்கு நான்கு வழிகள்
பைபிள், பணத்தை நிர்வகிப்பதற்கு வழிகாட்டும் ஒரு புத்தகம் அல்ல. ஆனால், நடைமுறைக்கு உதவும் சிறந்த ஆலோசனைகள் அதில் உள்ளன; அவை, பணப் பிரச்சினைகளைச் சமாளிக்க தம்பதியருக்கு உதவும். அதிலுள்ள ஆலோசனைகளைச் சிந்தித்துப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை ஏன் பின்பற்றக்கூடாது?
1. பண விஷயத்தைப் பற்றி அமைதியாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.
“ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.” (நீதிமொழிகள் 13:10) நீங்கள் வளர்ந்த சூழ்நிலை காரணமாக பண விஷயத்தைப் பற்றி மற்றவர்களிடம், முக்கியமாக உங்கள் துணையிடம் பேசுவது சங்கடமாக இருக்கலாம். என்றாலும், இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி கலந்துபேசக் கற்றுக்கொள்வதே ஞானமான காரியம். உதாரணமாக, பண விஷயத்தில் உங்களுடைய பெற்றோரின் மனப்பான்மை உங்கள் மனப்பான்மையை எப்படிப் பாதித்திருக்கலாம் என்பதை உங்கள் துணையிடம் சொல்லலாம், அல்லவா? அதேபோல், உங்கள் துணையின் மனப்பான்மையையும் அவர்/அவள் வளர்ந்த விதம் எப்படிப் பாதித்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
பண விஷயத்தில் பிரச்சினை எழும்பும்வரை காத்திருக்காதீர்கள், அதற்கு முன்பே பேசுங்கள். “இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?” என்று ஒரு பைபிள் எழுத்தாளர் கேட்டார். (ஆமோஸ் 3:3) இதன் கருத்து இங்கு எப்படிப் பொருந்துகிறது? தம்பதியர் இருவரும் ஒருமனதாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி பண விஷயத்தைப் பற்றிப் பேசினால் கருத்து வேற்றுமைக்கும் இடமிருக்காது, விதண்டாவாதத்திற்கும் இடமிருக்காது.
இப்படிச் செய்துபாருங்கள்: குடும்பத்தின் பண விவகாரத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். மாதத்தின் முதல் நாளையோ வாரத்தில் ஒரு நாளையோ அதற்காக ஒதுக்கலாம். 15 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்குள் சுருக்கமாகப் பேசுங்கள். இருவரும் ஆற அமர உட்கார்ந்து பேசுவதற்கேற்ற சமயத்தைத் தேர்ந்தெடுங்கள். சாப்பிடும் சமயத்திலோ பிள்ளைகளுடன் பொழுதுபோக்கும் சமயத்திலோ இந்த விஷயத்தைப் பற்றி பேசக்கூடாது என்று இருவரும் ஒப்புக்கொள்ளுங்கள்.
2. வருமானத்தை இருவரும் ஒரேபோல் கருதுங்கள்.
“ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோமர் 12:10) நீங்கள் ஒருவர் மட்டுமே சம்பாதிப்பதாக இருந்தால், உங்கள் வருமானத்தை உங்களுடைய சொந்தப் பணமாகக் கருதாமல் குடும்பத்தின் பணமாகக் கருதுவதன் மூலம் உங்களுடைய துணைக்கு மதிப்பு கொடுக்கலாம்.—1 தீமோத்தேயு 5:8.
நீங்கள் இருவருமே சம்பாதிக்கிறீர்கள் என்றால், எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்பதையும் கணிசமான தொகையைச் செலவு செய்திருந்தால் அதைப் பற்றியும் சொல்வதன் மூலம் ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுக்கலாம். அவற்றில் ஏதாவதொன்றைப் பற்றி உங்கள் துணையிடம் சொல்லாமல் மறைத்தால் அது உங்கள் மீதுள்ள நம்பிக்கைக்கு நீங்களே குழி பறிப்பதாய் இருக்கும், அதோடு உங்கள் பந்தத்திற்குப் பங்கம் விளைவிப்பதாயும் இருக்கும். அதே சமயத்தில், ஒரு ரூபாய் செலவழித்தாலும்கூட அதைத் துணையிடம் சொன்ன பிறகே செலவழிக்க வேண்டும் என்றில்லை. ஆனால், கணிசமான செலவுகளைக் குறித்துக் கலந்துபேசினால், உங்கள் துணையின் கருத்தை மதிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இப்படிச் செய்துபாருங்கள்: துணையிடம் சொல்லாமல் எவ்வளவு பணத்தைச் செலவிடலாம் என்பதைத் தீர்மானியுங்கள்; அது பத்து ரூபாயாக, நூறு ரூபாயாக அல்லது அதைவிட அதிகமாக இருந்தாலும் சரி பேசித் தீர்மானியுங்கள். அதற்கும் மேல் செலவு செய்ய விரும்பினால் துணையிடம் அதைக் குறித்துப் பேசுங்கள்.
3. உங்கள் திட்டங்களை எழுதி வையுங்கள்.
“திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்.” (நீதிமொழிகள் 21:5, பொது மொழிபெயர்ப்பு) நாளைக்காகத் திட்டமிடுவதற்கும் உங்களுடைய கடின உழைப்பை வீணாக்காதிருப்பதற்கும் ஒரு வழி, குடும்பத்திற்கான வரவு செலவு பட்டியலைப் போடுவதாகும். திருமணமாகி ஐந்து வருடங்களான நீனா இவ்வாறு கூறுகிறார்: “வரவு செலவுகளை எழுதிவைத்து பார்க்கும்போது உண்மையிலேயே அதிர்ச்சி அடைவீர்கள். அதன் பிறகு, சண்டைக்கு நிற்க மாட்டீர்கள்.”
நீங்கள் வரவு செலவு பட்டியலைப் போடும் முறை ரொம்பவே நுணுக்கமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மணமாகி 26 வருடங்களான தீபக் என்பவருக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். அவர் சொல்வதாவது: “முதலில் நாங்கள் பணத்தை உறையில் போடும் முறையைப் பயன்படுத்தினோம். ஒரு வாரத்திற்குத் தேவைப்படும் பணத்தை வெவ்வேறு உறைகளில் போட்டு வைத்தோம். உதாரணமாக, சாப்பாட்டுக்கு, பொழுதுபோக்குக்கு, முடி வெட்டுவதற்கு என வெவ்வேறு உறைகளை வைத்திருந்தோம். ஒரு உறையிலுள்ள பணம் தீர்ந்துவிட்டால், மற்றொரு உறையிலிருந்து எடுத்து உபயோகிப்போம். ஆனால், எடுத்த பணத்தை முடிந்தளவு சீக்கிரத்திலேயே திரும்ப அதில் போட்டுவிடுவோம்.” நீங்கள் எலக்ட்ரானிக் பேங்கிங் மூலம் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்துவதாக இருந்தால், திட்டமிடுவதும் செலவுகளை எழுதி வைப்பதும் ரொம்பவே முக்கியம்.
இப்படிச் செய்துபாருங்கள்: மாதாமாதம் மாறாத செலவினங்கள் அனைத்தையும் எழுதிவையுங்கள். உங்களுடைய வருமானத்தில் எத்தனை சதவீதத்தைச் சேமித்து வைக்கலாமெனத் தீர்மானியுங்கள். அதன் பிறகு, உணவு, மின்சாரம், தொலைபேசி போன்ற மாதாமாதம் மாறுகிற செலவினங்களை எழுதுங்கள். அடுத்ததாக, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறது என்பதைப் பல மாதங்களுக்கு எழுதிவையுங்கள். கடன் வாங்கிக் குவிக்காமலிருப்பதற்கு, தேவைப்பட்டால் உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்யுங்கள்.
4. யார் எதைச் செய்ய வேண்டுமென தீர்மானியுங்கள்.
“தனி மனிதராய் இருப்பதைவிட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும்.” (பிரசங்கி [சபை உரையாளர்] 4:9, 10, பொ.மொ.) சில குடும்பங்களில், பண விவகாரத்தைக் கணவர் கவனித்துக்கொள்கிறார். மற்ற சில வீடுகளிலோ மனைவி அந்தப் பொறுப்பைத் திறமையாகக் கவனித்துக்கொள்கிறாள். (நீதிமொழிகள் 31:10-28) ஆனாலும், அநேக தம்பதியர் அந்தப் பொறுப்பை இருவராகச் சுமக்க விரும்புகிறார்கள். “என்னுடைய மனைவி வீட்டுச் செலவுகளையும் மற்ற சிறு சிறு செலவுகளையும் கவனித்துக்கொள்கிறாள். நானோ, வரி, வாடகை போன்ற பெரிய செலவுகளைக் கவனித்துக்கொள்கிறேன். செலவுகளை ஒருவருக்கொருவர் தெரிவிப்பதன் மூலம் நாங்கள் எல்லாவற்றையும் இணைந்தே செய்கிறோம்” என்கிறார் திருமணமாகி 21 வருடங்களான மனோஜ். நீங்கள் எப்படிப்பட்ட முறையைப் பின்பற்றினாலும் சரி, இருவராகச் சேர்ந்து செயல்படுவதே முக்கியம்.
இப்படிச் செய்துபாருங்கள்: ஒவ்வொருவருடைய திறமைகளையும் பலவீனங்களையும் கருத்தில்கொண்டு, யார் எந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டுமென கலந்துபேசுங்கள். சில மாதங்களுக்குப் பிறகு, நீங்கள் செய்துள்ள ஏற்பாடு சரியாக இருக்கிறதா என அலசிப்பாருங்கள். மாற்றங்கள் செய்ய மனமுள்ளவர்களாய் இருங்கள். வீட்டுச் செலவுகளைக் கவனிப்பது, கடை கண்ணிக்குச் சென்று பொருள்களை வாங்குவது போன்றவற்றில் உட்பட்டுள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்ள அவ்வப்போது தம்பதியர் தங்களுடைய பொறுப்புகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளலாம்.
பண விவகாரத்தைப் பற்றிப் பேசுவதில் பளிச்சிட வேண்டிய குணங்கள்
பண விஷயத்தைப் பற்றிப் பேசுகையில் உங்கள் மத்தியிலுள்ள அன்பு தணிந்துபோக வேண்டிய அவசியமில்லை. திருமணமாகி ஐந்து வருடங்களான லதா, இதை அனுபவத்தில் கண்டிருக்கிறார். “நானும் என் கணவரும் பண விஷயத்தை மூடி முறைக்காமல் மனந்திறந்து பேசுகிறோம். அதன் பலன்? இப்போது நாங்கள் ஒன்றுசேர்ந்து காரியங்களைச் செய்கிறோம், எங்களுக்கிடையே அன்பும் அதிகரித்திருக்கிறது” என்கிறார் அவர்.
பணத்தை எப்படிச் செலவு செய்வதென தம்பதியர் கலந்து பேசும்போது, தங்களுடைய எதிர்பார்ப்புகளையும் ஆசைக் கனவுகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள்; அதோடு, தங்களுடைய திருமண வாக்குறுதிக்கு ஏற்ப நடப்பதைக் காட்டுகிறார்கள். பெரும் செலவுபிடித்த பொருள்களை வாங்குவதற்கு முன் இருவரும் கலந்துபேசும்போது, துணையின் கருத்துகளையும் உணர்ச்சிகளையும் மதிப்பதைக் காட்டுகிறார்கள். துணையிடம் கலந்துபேசாமல் ஓரளவு பணத்தை தங்கள் விருப்பப்படி செலவு செய்ய அனுமதிக்கும்போது ஒருவர்பேரில் ஒருவருக்கு நம்பிக்கை இருப்பதைக் காட்டுகிறார்கள். இவை யாவும், உண்மையிலேயே பாசமுள்ள பந்தத்திற்கு அத்தியாவசியமானவை. அத்தகைய பந்தம் பணத்தைவிட எத்தனையோ மேலானதாய் இருக்க, பணத்தைப் பற்றிய வாக்குவாதம் எதற்கு? (w09 08/01)
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b ‘கணவன் தன் மனைவிக்குத் தலையாக இருக்கிறார்’ என பைபிள் சொல்கிறது; ஆகவே, குடும்பத்தில் பண விஷயங்களைக் கவனிப்பதும் தன் மனைவியைச் சுயநலம் கருதாமல் அன்புடன் நடத்துவதும் அவருடைய முக்கியப் பொறுப்பாகும்.—எபேசியர் 5:23, 25.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் . . .
-
பண விஷயத்தைப் பற்றிக் கடைசியாக எப்போது நானும் என் துணையும் அமைதியாகப் பேசினோம்?
-
குடும்பத்திற்கு என்னுடைய துணை தரும் பண உதவிக்கு நன்றியைக் காட்டும் விதத்தில் நான் என்ன பேசலாம், என்ன செய்யலாம்?