Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனிதரின் எதிர்காலத்தைப் பற்றி

மனிதரின் எதிர்காலத்தைப் பற்றி

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்

மனிதரின் எதிர்காலத்தைப் பற்றி

இயேசு பரலோக வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்தாரா?

ஆம், அளித்தார்! இயேசுவும்கூட உயிர்த்தெழுப்பப்பட்டு, தம் தகப்பனோடு இருப்பதற்காகப் பரலோகத்திற்குச் சென்றார். ஆனால், அவர் மரித்து உயிர்த்தெழுப்பப்படுவதற்கு முன்னர் தமது 11 உண்மையுள்ள அப்போஸ்தலரிடம் இப்படிச் சொன்னார்: “என் தகப்பனுடைய வீட்டில் தங்குவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. . . . உங்களுக்காக ஓர் இடத்தைத் தயார்படுத்துவதற்கு நான் போகிறேன். (யோவான் 14:2) என்றாலும், பரலோகத்திற்குச் செல்பவர்கள் சிலரே. இயேசு தம் சீடர்களிடம் பேசுகையில் இதைத் தெளிவுப்படுத்தினார். “பயப்படாதே சிறுமந்தையே, உங்களிடம் அரசாங்கத்தைக் கொடுக்க உங்கள் தகப்பன் அங்கீகரித்திருக்கிறார்” என்று சொன்னார்.—லூக்கா 12:32.

‘சிறுமந்தையை’ சேர்ந்தவர்கள் பரலோகத்தில் என்ன செய்வார்கள்?

இந்தச் சிறு தொகுதியினர் இயேசுவுடன் பரலோக அரசாங்கத்தில் இருக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். அது நமக்கு எப்படித் தெரியும்? இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, அப்போஸ்தலன் யோவானுக்கு இதை வெளிப்படுத்தினார்; உண்மையுள்ள சிலர் “ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்வார்கள்” என்று சொன்னார். (வெளிப்படுத்துதல் 1:1; 5:9, 10) இது ஒரு நற்செய்தி. மனிதருடைய மிக முக்கியமான தேவைகளில் ஒன்று நல்ல அரசாங்கம். இயேசுவால் ஆளப்படும் இந்த அரசாங்கம் என்ன செய்யும்? ‘அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலத்திலே, மனிதகுமாரன் தமது மகிமையான சிம்மாசனத்தில் அமரும்போது, என்னைப் பின்பற்றுகிற நீங்களும் பன்னிரண்டு சிம்மாசனங்களில் அமருவீர்கள்’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 19:28) இயேசுவும் அவரைப் பின்பற்றுகிறவர்களும் ஆளப்போகிற அந்த அரசாங்கம் இந்தப் பூமியைப் ‘புதிதாக்கும்;’ அப்போது, முதல் மனிதக் தம்பதியர் பாவம் செய்ததற்கு முன் இருந்த நிலைமைக்கு பூமி மாறி புத்தம்புதிதாகும்.

மற்ற மனிதருக்கு இயேசு என்ன நம்பிக்கையை அளித்தார்?

இயேசு, பரலோகத்தில் வாழ்வதற்கே படைக்கப்பட்டார்; மனிதரோ பூமியில் வாழ்வதற்குப் படைக்கப்பட்டார்கள். (சங்கீதம் 115:16) அதனால்தான், “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள்; நான் மேலே இருந்து வந்தவன்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:23) மனிதருக்கு இந்தப் பூமியில் ஓர் அருமையான எதிர்காலம் இருப்பதைப் பற்றி அவர் பேசினார். ஒரு சமயம் அவர், “சாந்தகுணமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்” என்று சொன்னார். (மத்தேயு 5:5) சங்கீதத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருப்பதையே அவர் இங்கு சுட்டிக்காட்டினார்: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11, 29.

ஆகவே, முடிவில்லா வாழ்வைப் பெறப்போகிறவர்கள், பரலோகத்திற்குச் செல்லும் ‘சிறுமந்தையினர்’ மட்டுமே அல்லர். மற்ற எல்லாருக்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கிற இந்த வாய்ப்பைப் பற்றி இயேசு இவ்வாறு விளக்கினார்: “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்.”—யோவான் 3:16.

துன்பத்திலிருந்து மனிதரைக் கடவுள் எப்படி விடுவிப்பார்?

துன்பத்திற்குக் காரணமானவர்களிடமிருந்து கிடைக்கப்போகும் விடுதலையைப் பற்றி இயேசு சொன்னார்; அதாவது, “இப்போதே இந்த உலகம் நியாயந்தீர்க்கப்படுகிறது, இந்த உலகத்தை ஆளுகிறவன் வீழ்த்தப்படுவான்” என்றார். (யோவான் 12:31) முதலாவது, துன்பங்களுக்குக் காரணமான தேவபக்தியற்ற ஆட்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிக்கப்படுவார்கள். இரண்டாவது, சாத்தான் தொலைத்துக்கட்டப்படுவான்; அதன் பிறகு, அவனால் யாரையும் ஏமாற்ற முடியாது.

கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றி அறிந்துகொள்வதற்கும் அவர்கள்மேல் விசுவாசம் வைப்பதற்கும் வாய்ப்பு கிடைக்காமல் இதுவரை இறந்துபோன எத்தனையோ பேரைக் குறித்து என்ன சொல்லலாம்? தமக்கு அருகே கழுமரத்தில் அறையப்பட்டு இறந்த குற்றவாளியிடம், “நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 23:43) பூஞ்சோலையாய் மாறும் பூமியில் அவரை இயேசு உயிர்த்தெழுப்பும்போது அவரும் லட்சக்கணக்கான மற்றவர்களும் கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு வாய்ப்பைப் பெறுவார்கள். அப்போது, பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறும் சாந்தகுணமுள்ள நீதிமான்கள் மத்தியில் இருக்க அவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். (w09 08/01)

கூடுதல் தகவல் பெற, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? * என்ற புத்தகத்தில் அதிகாரம் 3 மற்றும் 7-ஐக் காண்க.

[அடிக்குறிப்பு]

யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 29-ன் படம்]

“நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29