Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுதான் பிரதான தூதரான மிகாவேலா?

இயேசுதான் பிரதான தூதரான மிகாவேலா?

வாசகரின் கேள்வி

இயேசுதான் பிரதான தூதரான மிகாவேலா?

ஒரே வார்த்தையில் சொன்னால், ஆம். ஒருவரைப் பல பெயர் வைத்து அழைப்பது அநேக கலாச்சாரங்களில் வழக்கம். அதுபோலத்தான் பைபிளில் குறிப்பிடப்படும் நபர்களுக்கும் பல பெயர்கள் இருந்தன. உதாரணத்திற்கு, பூர்வகால யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்ற மற்றொரு பெயரும் இருந்தது. (ஆதியாகமம் 35:10) அப்போஸ்தலன் பேதுருவுக்கு ஐந்து பெயர்கள் இருந்தன—சிமியோன், சீமோன், பேதுரு, கேபா மற்றும் சீமோன் பேதுரு. (மத்தேயு 10:2; 16:16; யோவான் 1:42; அப்போஸ்தலர் 15:7, 14) சரி, மிகாவேல் என்பது இயேசுவின் மற்றொரு பெயர் என்று எப்படிச் சொல்லலாம்? இதற்கு பைபிள் தரும் ஆதாரத்தைக் கவனியுங்கள்.

மாபலம் கொண்ட தேவதூதரான மிகாவேலைக் குறித்து பைபிளில் மொத்தம் ஐந்து முறை வருகிறது. தானியேல் புத்தகத்தில் மூன்று முறை வருகிறது. ஒரு தேவதூதரை காப்பாற்றிய மிகாவேலை, ‘பிரதான அதிபதிகளில் ஒருவன்,’ “உங்கள் அதிபதி” என்று தானியேல் 10:13, 21 அழைக்கிறது. அடுத்ததாக தானியேல் 12:1-ல், முடிவு காலத்தில், “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்” என்று வாசிக்கிறோம்.

அதன்பின் மிகாவேலைக் குறித்து வெளிப்படுத்துதல் 12:7-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. “மிகாவேலும் அவருடைய தூதர்களும்” சாத்தானோடும் அவனுடைய பொல்லாத தூதர்களோடும் போர் செய்து அவர்களை பரலோகத்திலிருந்து விரட்டியடித்ததாக அந்த வசனம் சொல்கிறது.

இதுவரை பார்த்த எல்லா வசனங்களிலும் மிகாவேல் என்ற தூதர் ஒரு மாவீரராக, கடவுளுடைய மக்களைக் காப்பாற்றும் போர்வீரராகச் சித்தரிக்கப்படுகிறார்; அதுவும் யெகோவாவின் முக்கிய விரோதியான சாத்தானை எதிர்த்து யுத்தம் செய்வதாகச் சித்தரிக்கப்படுகிறார்.

யூதா 9-ஆம் வசனம், மிகாவேலை ‘தலைமைத் தூதர்’ என அழைக்கிறது; பைபிளில் எந்த இடத்திலும் ‘தலைமைத் தூதர்’ என்ற வார்த்தை பன்மையில் பயன்படுத்தப்படவில்லை. யூதா 9-ஆம் வசனத்தைத் தவிர 1 தெசலோனிக்கேயர் 4:16-ல் மட்டும்தான் தலைமைத் தூதர் என்ற பட்டப்பெயர் வருகிறது. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைக் குறித்து பவுல் அந்த வசனத்தில் இவ்வாறு சொல்கிறார்: “நம் எஜமானர் [இயேசு] அதிகார தொனியோடும், தலைமைத் தூதருக்குரிய குரலோடும், கடவுளுடைய எக்காள முழக்கத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கி வருவார்.” எனவே, இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்துவே தலைமைத் தூதராக அடையாளம் காட்டப்படுகிறார்.

இதுவரை பார்த்த விஷயங்களிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? இயேசு கிறிஸ்துதான் தலைமைத் தூதரான மிகாவேல். இரண்டு பெயர்களுமே—மிகாவேல் (அர்த்தம்: “கடவுளைப் போல் இருப்பவர் யார்?”) மற்றும் இயேசு (அர்த்தம்: “யெகோவாவே என் இரட்சிப்பு”)—அவர் வகிக்கும் பங்கை குறிக்கின்றன; அதாவது கடவுளுடைய அரசாட்சிக்கு ஆதரவு அளிப்பதில் அவர் முன்னின்று செயல்படுவதைக் குறிக்கின்றன. பிலிப்பியர் 2:9 இவ்வாறு சொல்கிறது: “கடவுள் அவரை [மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவை] மேலான நிலைக்கு உயர்த்தி, மற்றெல்லாப் பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குத் தந்தருளினார்.”

இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பே பரலோகத்தில் வாழ்ந்துவந்தார் என்பதை நாம் நினைவில் வைப்பது அவசியம். இயேசு பிறப்பதற்கு முன்பு மரியாளை ஒரு தேவதூதர் சந்தித்து, கடவுளுடைய சக்தியின் உதவியால் அவர் கர்ப்பவதியாவார் என்றும், பிறக்கும் பிள்ளைக்கு இயேசு என பெயரிட வேண்டும் என்றும் சொன்னார். (லூக்கா 1:31) பூமியில் ஊழியம் செய்தபோது இயேசு தம்முடைய பரலோக வாழ்க்கையைக் குறித்து அடிக்கடி பேசினார்.—யோவான் 3:13; 8:23, 58.

எனவே, இயேசு பூமிக்கு வருவதற்கு முன் பரலோகத்தில் தலைமைத் தூதரான மிகாவேலாக இருந்தார். இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு மீண்டும் விண்ணுலகிற்குத் திரும்பிய பிறகு ‘பரலோகத் தகப்பனாகிய கடவுளுடைய மகிமைக்காக’ மறுபடியும் தலைமைத் தூதராக, மிகாவேலாக பொறுப்பேற்றார்.—பிலிப்பியர் 2:11. (w10-E  04/01)