Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு தம்மைக் குறித்துக் கற்பித்தவை

இயேசு தம்மைக் குறித்துக் கற்பித்தவை

இயேசு தம்மைக் குறித்துக் கற்பித்தவை

“தாம் யார், எங்கிருந்து வந்தார், எதற்காக இவ்வுலகத்திற்கு வந்தார், தம்முடைய எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பவற்றைக் குறித்ததில் இயேசுவுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை.”—நூலாசிரியரான ஹர்பர்ட் லாக்யர்.

இயேசு கற்பித்த விஷயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றில் விசுவாசம் வைப்பதற்கு முன், அவரைப் பற்றிய சில விஷயங்களை அறிந்துகொள்வது அவசியம். இயேசு உண்மையில் யாராக இருந்தார்? அவர் எங்கிருந்து வந்தார்? அவருடைய வாழ்க்கையின் நோக்கம் என்னவாய் இருந்தது? இக்கேள்விகளுக்கு மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய சுவிசேஷப் புத்தகங்களில் இயேசுவே பதிலளித்திருப்பதைக் காணலாம்.

அவர் பூமியில் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்திருந்தார் “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருந்திருக்கிறேன்” என்று இயேசு ஒருசமயம் சொன்னார். (யோவான் 8:58) அவர் பூமியில் பிறப்பதற்குச் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் ஆபிரகாம் வாழ்ந்தார். ஆனாலும், ஆபிரகாமின் காலத்திற்கு முன்பே இயேசு வாழ்ந்திருந்தார். அப்படியானால், இயேசு எங்கு இருந்தார்? “பரலோகத்திலிருந்து நான் இறங்கி வந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார்.—யோவான் 6:38.

கடவுளுடைய மகன் பரலோகத்திலிருக்கிற அநேக தேவதூதர்கள் யெகோவாவின் மகன்கள் என அழைக்கப்படுகிறார்கள்; அவர்களில் இயேசு ஒப்பற்றவர். அவர் தம்மை, ‘கடவுளுடைய ஒரே மகன்’ என்று குறிப்பிட்டார். (யோவான் 3:18) இந்த வார்த்தைகள், இயேசு மட்டுமே கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்டவர் என்பதைக் காட்டுகின்றன. இந்த ஒரே மகன் மூலமாகத்தான் மற்ற எல்லாவற்றையும் கடவுள் படைத்தார்.—கொலோசெயர் 1:16.

‘மனிதகுமாரன்’ இயேசு இந்த வார்த்தையைத் தம்மைக் குறிப்பதற்கே அதிகமாகப் பயன்படுத்தினார். (மத்தேயு 8:20) இதன் மூலம், தாம் மனித உருவில் வந்த தேவதூதரும் அல்ல, அவதாரமும் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார். அவர் உண்மையில் ஒரு மனிதனாகவே இருந்தார். கடவுள் தம்முடைய சக்தியின் மூலம் தம் மகனின் உயிரைப் பரலோகத்திலிருந்து பூமியிலிருந்த கன்னிப் பெண்ணான மரியாளின் கருப்பைக்கு மாற்றினார். அதன் விளைவாக, பாவமற்ற, பரிபூரண மனிதராக இயேசு பிறந்தார்.—மத்தேயு 1:18; லூக்கா 1:35; யோவான் 8:46.

வாக்குறுதி அளிக்கப்பட்ட மேசியா “மேசியா வருகிறாரென்று எனக்குத் தெரியும்” என்று ஒரு சமாரியப் பெண் இயேசுவிடம் சொன்னாள். அதற்கு அவர், “உன்னோடு பேசுகிற நானே அவர்” என்று கூறினார். (யோவான் 4:25, 26) “கிறிஸ்து” என்ற வார்த்தையைப் போலவே “மேசியா” என்ற வார்த்தையும் “நியமிக்கப்பட்டவர்” என்ற அர்த்தத்தைத் தருகிறது. இயேசு, கடவுளுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒரு விசேஷப் பங்கை வகிப்பதற்காக அவரால் நியமிக்கப்பட்டார்.

அவருடைய முக்கியப் பணி “நான் . . . கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று இயேசு ஒரு சமயம் சொன்னார். (லூக்கா 4:43) கஷ்டத்திலிருந்த மக்களுக்கு அவர் அநேக நல்ல காரியங்களைச் செய்தபோதிலும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிப்பதற்கே வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்தார். அந்த அரசாங்கத்தைப் பற்றி அவர் கற்பித்த காரியங்களைப் பிற்பாடு சிந்திப்போம்.

இயேசு ஒரு சாதாரண மனிதரே அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. a அவருடைய பரலோக வாழ்க்கை, பூமியில் அவர் சொன்ன வார்த்தைகளை இன்னுமதிக முக்கியத்துவமுள்ளதாய் ஆக்கியது எப்படியென நாம் பார்க்கப் போகிறோம். அப்படியானால், உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செய்தியை அவர் அறிவித்ததில் ஆச்சரியம் உண்டா? (w10-E  04/01)

[அடிக்குறிப்பு]

a இயேசுவையும் கடவுளுடைய நோக்கத்தில் அவருடைய பங்கையும் குறித்த கூடுதல் தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 4-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.