Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீமைகளுக்கு முடிவு நிச்சயம்!

தீமைகளுக்கு முடிவு நிச்சயம்!

தீமைகளுக்கு முடிவு நிச்சயம்!

கடவுள் தமது வார்த்தையாகிய பைபிளை நமக்குக் கொடுத்திருக்கிறார்; மக்கள் கெட்ட காரியங்களைச் செய்வதற்கான காரணத்தை அது தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. அதுமட்டுமல்ல, சுயமாகத் தெரிவு செய்யும் சுதந்திரத்தையும் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும் திறமையையும்கூட கடவுள் நமக்குத் தந்திருக்கிறார்; அதனால்தான் கெட்ட காரியங்களிலிருந்து நம்மால் விலகியிருக்க முடிகிறது. (உபாகமம் 30:15, 16, 19) நம் மனதுக்குள் துளிர்விடும் எந்தக் கெட்ட சிந்தனையையும் உடனடியாகக் கண்டுகொண்டு அதைக் களைந்தெறிய இந்தத் திறமைகள் உதவுகின்றன. நாம் கெட்ட காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதன் பலனாக, நாமும் சந்தோஷமாய் இருப்போம், நம்மைச் சுற்றியுள்ளவர்களும் சந்தோஷமாய் இருப்பார்கள்.—சங்கீதம் 1:1.

கெட்ட காரியங்களில் ஈடுபடுவதை நாம் எவ்வளவுதான் தவிர்த்தாலும் இந்த உலகிலுள்ள மற்றவர்கள் தொடர்ந்து அவற்றில் ஈடுபடவே செய்கிறார்கள். அதனால்தான் பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “கடைசி நாட்களில், சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்கள் வருமென்று அறிந்துகொள்.” அது ஏன் ‘கொடிய காலம்’ என அழைக்கப்படுகிறது என்பதையும் அது சொல்கிறது: “மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, நம்பிக்கை துரோகிகளாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, அவதூறு பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, காட்டிக்கொடுக்கிறவர்களாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக, பக்திமான்களைப் போல் காட்டிக்கொண்டு அதற்கு நேர்மாறாய் வாழ்கிறவர்களாக இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு.”—2 தீமோத்தேயு 3:1-5.

மேற்கூறப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனத்தில் ‘கடைசி நாட்கள்’ என்ற சொற்றொடரைக் கவனித்திருப்பீர்கள். அதை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? பொதுவாக ‘கடைசி நாட்கள்’ என்று சொல்லும்போது ஏதோவொரு காரியம் முடிவுக்கு வருவதாக மக்கள் புரிந்துகொள்கிறார்கள். அப்படியென்றால், முடிவுக்கு வரப்போகிற அந்தக் காரியம் எது? இதைப் பற்றி பைபிளில் கடவுள் என்ன வாக்குறுதி அளித்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

தீயோர் துடைத்தழிக்கப்படுவார்கள்.

“இன்னும் சில காலத்திற்குப் பின் தீயோர் இரார். அந்த ஜனங்களைத் தேடிப் பார்க்கையில் அவர்கள் அழிந்துபோயிருப்பார்கள். தேவன் வாக்களித்த தேசத்தை [அதாவது, பூமியை] தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள். அவர்கள் சமாதானத்தை அனுபவிப்பார்கள்.”சங்கீதம் 37:10, 11, ஈஸி டு ரீட் வர்ஷன்.

“கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.”சங்கீதம் 145:20.

கொடுமை இனி தலைதூக்காது.

“கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்.”சங்கீதம் 72:12, 14.

‘படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறும்.’ரோமர் 8:21.

மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும்.

“அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”மீகா 4:4.

“வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.”ஏசாயா 65:21, 22.

நியாயம் கிடைக்கும்.

“அப்படியிருக்க, தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும்போது கடவுள் அவர்களுக்கு நியாயம் வழங்காமல் இருப்பாரா? . . . நான் உங்களுக்குச் சொல்கிறேன், சீக்கிரத்தில் அவர்களுக்கு நியாயம் வழங்குவார்.”லூக்கா 18:7, 8.

“கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்.”சங்கீதம் 37:28.

நீதி மேலோங்கும்.

“உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.”ஏசாயா 26:9.

“ஆனால், அவருடைய வாக்குறுதியின்படியே நீதி குடிகொண்டுள்ள புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று ஆவலோடு காத்திருக்கிறோம்.”2 பேதுரு 3:13.

இன்றே மக்கள் மாறிவருகிறார்கள்...

இந்த வாக்குறுதிகளைப் பற்றித் தெரிந்துகொண்ட பின் நாம் அனைவருமே ஆசுவாசம் அடைந்திருப்போம். ஆனால், இந்த வாக்குறுதிகள் நிஜமாகும் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு இப்போதே நம்மிடம் அத்தாட்சி இருக்கிறது. அது என்ன அத்தாட்சி? இப்போதே உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் சுயநலத்தை, ஒழுக்கயீனத்தை, மூர்க்கத்தனத்தைக் களைந்துவிட்டு நேர்மையையும் சமாதானத்தையும் கனிவையும் அணிந்திருக்கிறார்கள். 70 லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள், பகைக்கும் வன்முறைக்கும் இரத்தக்களரிக்கும் தீனிபோட்டிருக்கிற இனம், குலம், தேசம், அரசியல், பொருளாதார பாகுபாடுகளைத் தகர்த்தெறிந்து சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாய் ஆகியிருக்கிறார்கள்! a எதிர்காலத்தில் கடவுளுடைய வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும் என்பதற்கு இதுவே அச்சாரமாய் இருக்கிறது.

சரி, இந்த மாற்றத்திற்கு வழிவகுப்பது எது? தீர்க்கதரிசி ஏசாயாவால் பதிவு செய்யப்பட்ட இன்னொரு பைபிள் வாக்குறுதி இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது. அது சொல்வதாவது:

“ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். . . . சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால்மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:6-9.

எதிர்காலத்தில் மனிதர்களுடன் மிருகங்கள் ஒற்றுமையாய் இருக்கும் என்பதை மட்டும்தான் இந்தத் தீர்க்கதரிசனம் குறிக்கிறதா? இல்லை, அதைவிட முக்கியமான ஒரு குறிப்பை உணர்த்துகிறது. “பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” என்றும் அந்த வசனம் சொல்வதைக் கவனியுங்கள். கர்த்தரை அறிகிற அறிவு, மிருகங்களின் குணத்தை மாற்றுமா? மாற்றாது. ஆனால், அந்த அறிவால் மனிதர்களின் குணத்தை மாற்ற முடியும், அது மாற்றியும் வருகிறது! பைபிள் கற்பிப்பதைத் தெரிந்துகொண்டு அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது ஒருவேளை மிருக குணம் படைத்தவர்களாயிருந்த மனிதர்கள்கூட அந்தக் குணத்தைக் களைந்துவிட்டு கிறிஸ்துவின் சுபாவத்தை வளர்த்துக்கொள்ளலாம் என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் முன்னுரைக்கிறது.

உதாரணமாக, ஜெகன் b என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். நியாயத்திற்காகப் போராடுவதாய் நினைத்துக்கொண்டு அவர் ஒரு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார். அவருடைய பயிற்சி முடிந்த பிறகு ஒரு போலீஸ் குடியிருப்பை குண்டு வைத்து தகர்க்கும்படி கட்டளை பெற்றார். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் 18 மாதங்களைக் கழித்தார்; அங்கு இருந்துகொண்டே நாச வேலையைத் தொடர்ந்தார். இதற்கிடையில், ஜெகனின் மனைவி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையான பின்பு ஜெகனும் பைபிளைப் படிக்கத் தொடங்கினார். கடவுளாகிய யெகோவாவைப் பற்றி அவர் கற்றுக்கொண்டபோது தன் மனோபாவத்தையும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தையும் அடியோடு மாற்றிக்கொண்டார். “நான் தீவிரவாதியாக இருந்தபோது யாரையும் கொலை செய்யாததை நினைத்துச் சந்தோஷப்படுகிறேன்; அதற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்” என்கிறார் ஜெகன். “இப்போது நான் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் எனும் வாளைப் பயன்படுத்தி அவருடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்குச் சொல்கிறேன்; ஆம், நிஜமான சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்படும் என்ற செய்தியைச் சொல்கிறேன்” என்றும் அவர் கூறுகிறார். எந்தக் குடியிருப்பைத் தகர்த்துத் தரைமட்டமாக்க அவர் நினைத்திருந்தாரோ அதே குடியிருப்புக்குப் போய்ச் சமாதான செய்தியைச் சொன்னார், அதுவும் வன்முறையே இல்லாத ஓர் உலகத்தைப் பற்றிய செய்தியைச் சொன்னார்.

மக்களின் வாழ்க்கைமீது கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கிற பலமான செல்வாக்கைப் பார்க்கும்போது கெட்ட காரியங்களைத் துடைத்தழிப்பதாக கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும் என்பதைத் தாராளமாக நம்பலாம். ஆம், மக்கள் காலமெல்லாம் கெட்ட காரியங்களைச் செய்கிறவர்களாகவே இருக்க மாட்டார்கள்; அவர்கள் திருந்தி, நல்லவர்களாக மாறியிருப்பார்கள். தீமைக்குப் பின்னால் இருக்கிற பிசாசாகிய சாத்தானை யெகோவா சீக்கிரம் ஒழித்துக்கட்டுவார்; இன்றைய உலகை அவன்தான் ஆட்டிப்படைக்கிறான். அதனாலேயே பைபிள், “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது” என்று சொல்கிறது. (1 யோவான் 5:19) ஆனால், சீக்கிரத்தில் இந்தப் பொல்லாதவன், இருந்த இடம் தெரியாமல் போய்விடுவான். திருந்த மறுக்கிற கெட்டவர்களும் அவனோடு சேர்ந்து அழிந்துபோவார்கள். பொன்னான அந்தக் காலத்தில் வாழ்க்கை எவ்வளவு இனிமையாய் இருக்கும்!

அப்படிப்பட்ட ஒரு பொற்காலத்தில் வாழ ஒருவர் என்ன செய்ய வேண்டும்? இன்று மக்களை மாற்றிவருவதும், எதிர்காலத்தில் உலகளாவிய மாற்றங்களைக் கொண்டுவருவதும் ‘கர்த்தரை அறிகிற அறிவே’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜெகன் செய்ததைப் போலவே, பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்று அதை வாழ்க்கையில் கடைப்பிடித்தீர்கள் என்றால் ‘நீதி குடிகொள்ளும்’ புதிய பூமியில் வாழும் வாய்ப்பை நீங்களும் பெறலாம். (2 பேதுரு 3:13) எனவே, “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” என்ற பழமொழிக்கு ஏற்ப, வாய்ப்பு இருக்கும்போதே யெகோவாவைப் பற்றியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்; அதுவே முடிவில்லா வாழ்வுக்கு உங்களை வழிநடத்தும்.—யோவான் 17:3. (w10-E 09/01)

[அடிக்குறிப்புகள்]

a கூடுதல் தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? என்ற சிற்றேட்டைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

b பெயர் மாற்றப்பட்டுள்ளது.

[பக்கம் 9-ன் சிறுகுறிப்பு]

‘நீதி குடிகொள்ளும்’ புதிய பூமியில் வாழும் வாய்ப்பை நீங்களும் பெறலாம்.—2 பேதுரு 3:13