வாழ்க்கை சரிதை
‘பார்த்தேன், ஆனால் புரியவில்லை’
1975-ஆம் வருடம். எனக்கு அப்போது இரண்டு வயது. ஒருநாள், என் அம்மா என்னைத் தூக்கி வைத்திருந்தபோது ஒரு பெண்மணி கைதவறி கனமான ஒரு பொருளைக் கீழே போட்டுவிட்டார்களாம். காதைப் பிளக்கிற சத்தம் கேட்டதாம். ஆனால், என்னிடம் ஒரு சின்ன நடுக்கம்கூட இல்லையாம். அப்போதுதான் எனக்கு ஏதோ கோளாறு இருக்கிறது என்று என் அம்மாவுக்குச் சந்தேகம் வந்திருக்கிறது. பின்பு, மூன்று வயதாகியும் எனக்குப் பேச்சு வரவில்லை. டாக்டர்களிடம் காட்டியபோது, எனக்குக் காது கேட்காது என்ற விஷயம் ஊர்ஜிதமானது. என் குடும்பத்தார் அப்படியே அதிர்ந்துபோனார்கள்!
என் பிஞ்சு வயதிலேயே அப்பா அம்மா விவாகரத்து செய்துகொண்டார்கள். என்னையும் என் இரண்டு அண்ணன்களையும் ஒரு அக்காவையும் தனிமரமாக நின்று வளர்க்கும் பொறுப்பு அம்மாவின் தோளில் விழுந்தது. அந்தச் சமயத்தில், பிரான்சில் வாழ்ந்த காதுகேட்காத பிள்ளைகளின் நிலைமை பரிதாபத்துக்குரியது! ஏனென்றால், காதுகேளாதோருக்கான அன்றைய கல்விமுறையே வித்தியாசமாக இருந்தது. அதனால் நான் சிலசமயம் படாதபாடு பட்டேன். என்றாலும், காதுகேட்காத நிறையப் பேருக்குக் கிடைக்காத ஒரு பாக்கியம் எனக்குச் சின்ன வயதிலேயே கிடைத்தது. அது என்ன? என் கதையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
காதுகேட்காத பிள்ளைகள் கண்டிப்பாகப் பேசிப்பழக வேண்டுமென்றும், ஆசிரியர்களின் உதட்டு அசைவைப் பார்த்து அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் கல்வியாளர்கள் சில காலம்வரை நம்பிவந்தார்கள். சொல்லப்போனால், பிரான்சு நாட்டிலிருந்த பள்ளிகளில் சைகை மொழி முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. வகுப்புகள் நடக்கும்போது சைகை செய்யாமல் இருப்பதற்காக காதுகேட்காத சில பிள்ளைகளுடைய கைகள்கூட பின்பக்கம் வைத்துக் கட்டப்பட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
என்னுடைய சின்னஞ்சிறு வயதில், ஒவ்வொரு வாரமும் பேச்சு சிகிச்சை நிபுணர் ஒருவரிடம் நான் மணிக்கணக்காகப் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. அவர் என் தாடையை அல்லது தலையைப் பிடித்துக்கொண்டு, ஏதேதோ சத்தம் செய்யும்படி திரும்பத் திரும்பச் சொல்வார்! ஆனால், அந்தச் சத்தமெல்லாம் எனக்கு ஒன்றுமே கேட்காது. மற்ற பிள்ளைகளிடமும் என்னால் பேச முடியவில்லை. அதெல்லாம் எனக்குச் சித்திரவதையாக இருந்தது.
பின்பு, ஆறு வயதானபோது காதுகேளாதோருக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டேன். வாழ்க்கையில் முதல் முறையாக என்னைப் போன்ற காதுகேளாத பிள்ளைகளைச் சந்தித்தேன். ஆனால், அங்கேயும் சைகை மொழி தடை செய்யப்பட்டிருந்தது. வகுப்பில் சைகை செய்தால், கை முட்டியில் அடிப்பார்கள் அல்லது தலைமுடியைப் பிடித்து இழுப்பார்கள். இருந்தாலும், நாங்களே உருவாக்கிய சில சைகைகள் மூலம் ரகசியமாக ‘பேசிக்கொண்டோம்.’ ஒருவழியாக, என்னால் மற்ற பிள்ளைகளிடம் ‘பேச’ முடிந்தது. இப்படி, நான்கு வருடம் சந்தோஷமாகக் கழிந்தது.
ஆனால் பத்து வயதானபோது, ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன்; அங்கே காதுகேட்கும் பிள்ளைகளுடன் படிக்க வேண்டியிருந்தது. நான் அப்படியே நொறுங்கிப்போனேன்! இந்த உலகில் நான் ஒருவன்தான் காதுகேட்காத பிள்ளையோ என்று நினைத்தேன். என் குடும்பத்திலும் யாருமே சைகை மொழியைக் கற்றுக்கொள்ளவில்லை; போதாக்குறைக்கு, காதுகேளாத பிள்ளைகளிடமும் என்னைப் பழக விடவில்லை; இதெல்லாம்... பேச்சு சிகிச்சையால் எனக்குப் பயனில்லாமல் போய்விடும் என்று டாக்டர்கள் சொன்ன ஆலோசனையால் வந்த வினை. ஒருசமயம் காது நிபுணர் ஒருவரிடம் போனபோது நடந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவருடைய மேஜையில் ஒரு சைகை மொழி புத்தகம் இருந்தது. அட்டைப் படத்தில் இருந்த படத்தைப் பார்த்தபோது, “எனக்கு இது வேண்டும்!” என்று *
கேட்டேன். உடனே அதை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டார்.பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டேன்
பிள்ளைகளான எங்களை பைபிள் நியதிகளின்படி வளர்க்க அம்மா அரும்பாடுபட்டார். போர்டியாக்ஸுக்கு அருகே உள்ள மரின்யாக்கில் இருந்த யெகோவாவின் சாட்சிகளின் சபைக்கு அழைத்துப்போனார். சிறுவனான எனக்கு அங்கு நடந்த எதுவும் புரியவில்லை. இருந்தாலும், அங்கிருந்தவர்கள் மாறிமாறி என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு பேச்சாளர் சொல்வதை எழுதிக் காட்டினார்கள். அவர்களுடைய அன்பிலும் அக்கறையிலும் உருகிப்போனேன். வீட்டில், அம்மா எனக்கு பைபிள் படிப்பு நடத்தினார். ஆனால், அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்கள் அரைகுறையாகத்தான் புரிந்தது. தானியேலுக்கு ஒரு தேவதூதன் தீர்க்கதரிசனம் சொன்னபோது தானியேல், ‘நான் கேட்டேன், ஆனால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று சொன்னார். (தானியேல் 12:8, ERV) நானும் ஒருவிதத்தில் அப்படித்தான் உணர்ந்தேன். ஆனால் ஒரு வித்தியாசம், ‘நான் பார்த்தேன், ஆனால் புரிந்துகொள்ள முடியவில்லை.’
இருந்தாலும், அடிப்படை பைபிள் சத்தியங்கள் என் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்ற ஆரம்பித்தன. எதையெல்லாம் நான் தெளிவாகப் புரிந்துகொண்டேனோ அதையெல்லாம் பொக்கிஷமாய்ப் போற்றினேன், என் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயன்றேன். மற்றவர்களிடமிருந்தும் நிறையக் கற்றுக்கொண்டேன். உதாரணத்திற்கு, நாம் பொறுமையாக இருக்க வேண்டுமென பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 5:7, 8) ஆனால், பொறுமை என்றால் என்னவென்று எனக்கு முதலில் புரியவே இல்லை. சபையார் பொறுமையாக நடந்துகொண்டதைப் பார்த்தபோதுதான் பொறுமைக்கு அர்த்தம் கிடைத்தது. ஆம், கிறிஸ்தவ சபையிலிருந்து எனக்குக் கிடைத்த நன்மைகள் ஏராளம், ஏராளம்!
பெருத்த ஏமாற்றம், இன்ப அதிர்ச்சி
நான் டீனேஜராக இருந்தபோது ஒருநாள், காதுகேளாத இளைஞர்கள் சிலர் தெருவில் நின்றுகொண்டு சைகை மொழியில் ‘பேசுவதை’ பார்த்தேன். நான் அவர்களோடு ரகசியமாகப் பழக ஆரம்பித்தேன், பிரெஞ்சு சைகை மொழியை (FSL) கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதேசமயம், கிறிஸ்தவக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டேன்; அங்கே, ஸ்டாப்பன் என்ற ஒரு இளம் சாட்சி என்மேல் ரொம்பவே அக்கறை காட்டினார். என்னுடன் ‘பேச’ கடும் முயற்சி எடுத்தார். சீக்கிரத்திலேயே நாங்கள் நகமும் சதையும் போல் ஆனோம். ஆனால், எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது. ஸ்டாப்பன் ராணுவத்தில் சேர மறுத்ததால் சிறையில் தள்ளப்பட்டார். நான் அப்படியே உடைந்துபோனேன்! ஸ்டாப்பன் சிறையில் வாடினார், நான் மனச்சோர்வில் வாடினேன்; அதன்பின், கூட்டங்களுக்குப் போவதைப் படிப்படியாக நிறுத்தினேன்.
பதினொரு மாதங்களுக்குப் பிறகு, ஸ்டாப்பன் விடுதலையாகி வீடுதிரும்பினார். என்னைப் பார்க்க வந்தவர் என்னுடன் சைகை மொழியில் பேசினார்! ஆச்சரியமாக இருந்தது! என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை! அதை எப்படிக் கற்றுக்கொண்டார்? சிறைச்சாலை அவருக்கு “பாடசாலை” ஆகியிருந்தது! ஆம், அங்குதான் அவர் பிரெஞ்சு சைகை மொழியைக் கற்றுக்கொண்டார்! சைகை மொழியில் அவர் என்னுடன் பேசப்பேச அவருடைய கை அசைவுகளையும் முகபாவங்களையும் பார்த்து பரவசமானேன். இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொள்ளப்போகிறேன் என்று சந்தோஷப்பட்டேன், உற்சாகத்தின் உச்சிக்கே போனேன்!
ஒருவழியாக பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொண்டேன்
ஸ்டாப்பன் எனக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார். அதுவரை என் மனதில் துண்டு துண்டாகக் கிடந்த பைபிள் சத்தியங்கள் அப்போதுதான் வடிவம் பெற்றன. நான் குழந்தையாக இருந்தபோது, நம்முடைய பிரசுரங்களில் வருகிற அழகிய படங்களை ஆசை ஆசையாகப் பார்ப்பேன்; அவற்றிலுள்ள வெவ்வேறு கதாபாத்திரங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்ப்பேன், பைபிள் கதைகள் என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிய வேண்டுமென்பதற்காக நுணுக்கமான எல்லா விவரங்களையும் ஆராய்ந்து பார்ப்பேன். ஆபிரகாமை, அவருடைய “சந்ததியை,” ‘திரள் கூட்டத்தை’ பற்றியெல்லாம் எனக்குத் தெரிந்திருந்தது; ஆனால், சைகை மொழியில் விளக்கப்பட்டபோதுதான், அவை எனக்கு உண்மையிலேயே புரிய ஆரம்பித்தன. (ஆதியாகமம் 22:15-18; வெளிப்படுத்துதல் 7:9) ஒருவழியாக, என் சொந்த மொழியை, என் நெஞ்சைத் தொட்ட மொழியை, நான் கண்டுபிடித்துவிட்டேன்!
சபைக் கூட்டங்களில் சொல்லப்படுகிற விஷயங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தன, என் உள்ளத்தைத் தொட்டன; அதனால், இன்னும் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஏங்கினேன். ஸ்டாப்பனின் உதவியோடு பைபிளை அதிகமதிகாகக் கற்றுக்கொண்டேன்; 1992-ல் யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுத்தேன். இப்படி நான் நிறைய முன்னேற்றம் செய்தாலும், சிறுவயதில் மற்றவர்களோடு நன்கு பேசிப் பழகாததால், கூச்ச சுபாவத்தில் தத்தளித்தேன், ஓட்டுக்குள் சுருண்டுக்கொள்ளும் நத்தை போல் இருந்தேன்.
பயத்தையும் கூச்சத்தையும் எதிர்த்துப் போராடினேன்
காலப்போக்கில், காதுகேளாதோருக்கான எங்கள் சிறிய சபைத் தொகுதி போர்டியாக்ஸ் புறநகர் பகுதியிலிருந்த பெஸ்ஸாக் சபையோடு இணைக்கப்பட்டது. அங்கே என்னால்
தொடர்ந்து ஆன்மீக முன்னேற்றம் செய்ய முடிந்தது. ஆனால், மற்றவர்களோடு ‘பேசுவது’ எனக்கு இன்னமும் போராட்டமாகத்தான் இருந்தது; காதுகேட்கிற என் நண்பர்கள் தாங்கள் பேசுவதை எனக்குப் புரியவைக்க முடிந்தளவு முயற்சி செய்தார்கள். அதிலும், ஷெல்-அலோடி தம்பதியர் என்னோடு ‘பேச’ விசேஷ முயற்சி எடுத்தார்கள். சபைக் கூட்டங்கள் முடிந்த பிறகு அவர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட அல்லது காபி குடிக்க என்னை அடிக்கடி அழைத்தார்கள். இதனால், எங்களுக்குள் அருமையான நட்பு மலர்ந்தது. கடவுளுடைய அன்பான வழிகளைப் பின்பற்றுகிற மக்களோடு இருப்பது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்!இந்தச் சபையில்தான் என் அருமை வனசாவைச் சந்தித்தேன். குறிப்பறிந்து நடக்கிற குணத்தையும் நியாயத்தன்மையையும் கண்டு அவளிடம் மனதைப் பறிகொடுத்தேன். எனக்குச் செவித்திறன் இல்லாததை அவள் ஒரு தடைக்கல்லாக பார்க்கவில்லை, சைகை மொழி கற்றுக்கொள்வதற்கான படிக்கல்லாகவே பார்த்தாள். நான் அவளைக் காதலிக்க ஆரம்பித்தேன், 2005-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இப்போதும்கூட ‘பேசுவது’ எனக்குச் சிரமம்தான், என்றாலும் என்னுடைய கூச்சத்தையும் பயத்தையும் எதிர்த்துப் போராட... எல்லோரிடமும் சகஜமாக ‘பேச’... வனசாதான் எனக்குப் பேருதவியாக இருந்துவருகிறாள். என்னுடைய பொறுப்புகளை நிறைவேற்ற எனக்குப் பக்கபலமாக இருந்துவருகிறாள். அதற்காக அவளை நான் ரொம்பவே மெச்சுகிறேன்.
யெகோவா தந்த மற்றொரு பரிசு
எங்களுக்குத் திருமணமான அதே வருடத்தில், லூவ்யே என்ற இடத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய பிரான்சு கிளை அலுவலகத்திலிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது; மொழிபெயர்ப்பு வேலையில் ஒரு மாத பயிற்சி பெறுவதற்கான அழைப்பு அது. சமீப காலமாக, டிவிடி-யில் பிரெஞ்சு சைகை மொழி பிரசுரங்கள் பலவற்றை வெளியிடுவதற்காக இந்தக் கிளை அலுவலகத்தினர் கடினமாய் உழைத்து வருகிறார்கள். மொழிப்பெயர்ப்பில் அன்று அதிக வேலை இருந்ததால், மொழிபெயர்ப்புக் குழுவுக்கு அதிக ஆட்கள் தேவைப்பட்டார்கள்.
கிளை அலுவலகத்தில் சேவை செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பை நானும் வனசாவும் மாபெரும் பாக்கியமாக... யெகோவா தந்த பரிசாக... கருதினோம். இருந்தாலும், எங்களுக்குக் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. எங்களுடைய சைகை மொழி தொகுதிக்கு என்னவாகும், எங்களுடைய வீட்டை என்ன செய்வது, கிளை அலுவலகத்திற்கு அருகிலேயே வனசாவுக்கு வேலை கிடைக்குமா என்றெல்லாம் யோசித்தோம். இந்த எல்லாக் கேள்விகளுக்கும் யெகோவா அதிசயமான விதத்தில் பதில் தந்தார். எங்கள்மீதும் காதுகேளாத மக்கள்மீதும் யெகோவாவுக்கு இருந்த அன்பை என்னால் நன்றாக உணர முடிந்தது.
ஒற்றுமையான மக்களின் பேராதரவு
இப்போது நான் மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபட்டிருப்பதால், காதுகேளாதோருக்கு ஆன்மீக உதவி அளிக்க எந்தளவு முயற்சி எடுக்கப்படுகிறது என்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். கிளை அலுவலகத்தில் உள்ள அநேகர் என்னோடு ‘பேசுவதற்காக’ முயற்சி செய்வதைப் பார்க்கும்போது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. அவர்கள் சில சைகைகளைக் கற்றுக்கொண்டு என்னிடம் பேச முயற்சிக்கும்போது நான் அப்படியே நெகிழ்ந்துபோகிறேன். ஒதுக்கப்பட்டது போன்ற உணர்வு ஒருநாளும் ஏற்படுவதில்லை. அவர்கள் என்மீது பொழியும் அன்பு, யெகோவாவின் மக்கள் மத்தியிலுள்ள பிரமிக்க வைக்கும் ஒற்றுமைக்கு அருமையான அத்தாட்சி!—சங்கீதம் 133:1.
கிறிஸ்தவ சபையின் மூலம் எனக்கு உதவி செய்ய எப்போதும் யாராவது இருக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். அதற்காக நான் அவருக்கு ரொம்பவே நன்றியோடு இருக்கிறேன். என்னைப் போன்ற காதுகேட்காதவர்களுக்கு நம்முடைய அன்பான படைப்பாளரைப் பற்றிக் கற்றுக்கொடுத்து அவரிடம் நெருங்கி வர உதவ எனக்குக் கிடைத்த சின்ன வாய்ப்பை நான் பெரிதும் போற்றுகிறேன். எனக்கிருப்பது போன்ற குறையெல்லாம் நீக்கப்பட்டு, ஒன்றுபட்ட குடும்பமாக எல்லோரும் “சுத்தமான பாஷையை,” அதாவது யெகோவா தேவனையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய சத்தியத்தை, பேசுகிற அந்த நாளுக்காக நான் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.—செப்பனியா 3:9. ▪ (w13-E 03/01)
^ காதுகேளாத பிள்ளைகளுக்குச் சைகை மொழியில் பாடம் எடுப்பதற்கான அங்கீகாரத்தை பிரான்சு நாட்டு அரசாங்கம் 1991-ஆம் ஆண்டுதான் வழங்கியது.