Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வது எப்படி?

பைபிளை சுவாரஸ்யமாக படிக்க என்ன செய்யலாம்?

பைபிளை சுவாரஸ்யமாக படிக்க என்ன செய்யலாம்?

பைபிளை படிப்பது உங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறதா? இது பைபிளை நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள் என்பதைப் பொருத்துதான் இருக்கிறது. பைபிளை படிக்க வேண்டும் என்ற ஆசையையும் ஆர்வத்தையும் அதிகரிக்க நான்கு விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

எளிமையான, நம்பகமான மொழிபெயர்ப்பை பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தும் பைபிளில் இருக்கும் வார்த்தைகள் உங்களுக்கு புரியவில்லை என்றால், அதைப் படிப்பது சுவாரஸ்யமாக இருக்காது. அதனால், உங்களுடைய மனதைத் தொடும் எளிமையான பைபிள் மொழிபெயர்ப்பை பயன்படுத்துங்கள். அது நம்பகமான மொழிபெயர்ப்பாக இருக்க வேண்டும். *

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள். பைபிள், இன்று புத்தகமாக மட்டுமல்ல டிஜிட்டல் வடிவிலும் கிடைக்கிறது. பைபிளை நீங்கள் ஆன்லைனில் படிக்கலாம் அல்லது கம்ப்யூட்டரில்... டேப்லட்டில்... மொபைலில் டவுன்லோட் செய்து படிக்கலாம். சில அப்ளிகேஷன்களில், ஒரு வசனத்தோடு சம்பந்தப்பட்ட மற்ற வசனங்களையும் பார்க்கலாம். அல்லது, அதே வசனத்தை மற்ற மொழிபெயர்ப்புகளிலும் பார்க்கலாம். சில மொழிகளில் பைபிள் ஆடியோ பதிவிலும் கிடைக்கிறது. படிப்பதைவிட கேட்பது உங்களுக்கு பிடிக்கும் என்றால், ஆடியோ பதிவை பயன்படுத்துங்கள். நிறைய பேர், பயணம் செய்யும்போது அல்லது மற்ற வேலைகளைச் செய்யும்போது ஆடியோ பதிவுகளை கேட்க விரும்புகிறார்கள். உங்களுக்கு பிடித்த விதத்தில் பைபிளை படியுங்கள்.

மற்ற கருவிகளையும் பயன்படுத்துங்கள். பைபிளில் இருக்கும் விஷயங்களைக் கற்றுக்கொள்ள வரைபடங்கள், jw.org வெப்சைட், காவற்கோபுர பத்திரிகை போன்றவை உங்களுக்கு உதவும். வரைபடங்களைப் பயன்படுத்தி பைபிள் பதிவுகளை கற்பனை செய்து பார்க்கும்போது பைபிளை படிப்பது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். பைபிளில் உள்ள நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ள jw.org வெப்சைட்டில் “பைபிள் போதனைகள்” என்ற தலைப்பில் இருக்கும் கட்டுரைகள் உங்களுக்கு உதவும். அதோடு, காவற்கோபுர பத்திரிகையில் வரும் கட்டுரைகளும் உதவும்.

வித்தியாசமான முறைகளைப் பயன்படுத்துங்கள். பைபிளை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை படிப்பது ஒருவேளை உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். அதனால் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் சில பதிவுகளை முதலில் படிக்க ஆரம்பிக்கலாம். கடவுளுக்கு பிடித்தமாதிரி வாழ்ந்த நபர்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், அவர்களைப் பற்றிய பதிவுகளைப் படிக்கலாம். உதாரணத்துக்கு “ பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள். பைபிள் சம்பவங்களை, கால வரிசைப்படி நீங்கள் படிக்கலாம் அல்லது குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம். இப்படி வித்தியாசமான விதங்களில் நீங்கள் பைபிளை படிக்கலாம்.

^ பாரா. 4 புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் துல்லியமானது... நம்பகமானது... எளிமையானது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட இந்த பைபிள் 130-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது. நீங்கள் இதை jw.org வெப்சைட்டிலிருந்து டவுன்லோட் செய்யலாம். JW லைப்ரரி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதிலிருந்தும் பைபிளை படிக்கலாம். ஒருவேளை நீங்கள் விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் உங்களை சந்தித்து இந்த பைபிளை கொடுப்பார்கள்.