Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 7

இயேசுவைப் பார்க்க ஜோதிடர்கள் வருகிறார்கள்

இயேசுவைப் பார்க்க ஜோதிடர்கள் வருகிறார்கள்

மத்தேயு 2:1-12

  • ஜோதிடர்கள் ஒரு “நட்சத்திரத்தை” பின்தொடர்ந்து முதலில் எருசலேமுக்குப் போகிறார்கள், பிறகு இயேசுவிடம் போகிறார்கள்

கிழக்கிலுள்ள ஒரு நாட்டிலிருந்து சில ஆட்கள் வருகிறார்கள். அவர்கள் எல்லாருமே ஜோதிடர்கள். நட்சத்திரங்களின் நிலையை வைத்து, மக்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைத் தங்களால் கணிக்க முடியும் என்று சொல்லிக்கொள்கிறவர்கள். (ஏசாயா 47:13) அந்த ஆட்கள் தங்கள் நாட்டில் இருக்கும்போது, ஒரு “நட்சத்திரத்தை” பார்க்கிறார்கள். அதைப் பின்தொடர்ந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்கிறார்கள். அது அவர்களை பெத்லகேமுக்கு வழிநடத்தாமல் எருசலேமுக்கு வழிநடத்துகிறது.

ஜோதிடர்கள் எருசலேமுக்கு வந்ததும், “யூதர்களுடைய ராஜா எங்கே பிறந்திருக்கிறார்? நாங்கள் கிழக்கிலே இருந்தபோது அவருடைய நட்சத்திரத்தைப் பார்த்தோம்; அதனால், அவர் முன்னால் தலைவணங்க வந்தோம்” என்று சொல்கிறார்கள்.—மத்தேயு 2:1, 2.

எருசலேமை ஆட்சி செய்த ஏரோது ராஜா அதைக் கேட்டு கதிகலங்கிப்போகிறான். அதனால், முதன்மை குருமார்களையும் மதத் தலைவர்களையும் கூப்பிட்டு கிறிஸ்து எங்கே பிறப்பார் என்று விசாரிக்கிறான். அவர்கள் வேதவசனத்தைச் சுட்டிக்காட்டி, அவர் “பெத்லகேமில் பிறப்பார்” என்று சொல்கிறார்கள். (மத்தேயு 2:5; மீகா 5:2) உடனே ஏரோது அந்த ஜோதிடர்களை ரகசியமாக வரவழைத்து, “நீங்கள் போய் அந்தப் பிள்ளையைக் கவனமாகத் தேடிப்பாருங்கள், கண்டுபிடித்ததும் என்னிடம் வந்து சொல்லுங்கள்; நானும் போய் அந்தப் பிள்ளையின் முன்னால் தலைவணங்குகிறேன்” என்று சொல்கிறான். (மத்தேயு 2:8) ஆனால், இயேசுவைக் கொல்லத்தான் ஏரோது இப்படி நாடகமாடுகிறான்.

ஜோதிடர்கள் அங்கிருந்து கிளம்பியவுடன், ஓர் அதிசயம் நடக்கிறது. கிழக்கில் இருந்தபோது அவர்கள் பார்த்த “நட்சத்திரம்” அவர்களுக்கு முன்னால் போக ஆரம்பிக்கிறது. இது சாதாரண நட்சத்திரம் கிடையாது. அவர்களுக்கு வழிகாட்டுவதற்காகவே அனுப்பப்பட்ட நட்சத்திரம்! அந்த நட்சத்திரம் போகிற வழியிலேயே ஜோதிடர்களும் போகிறார்கள். அது கடைசியில் யோசேப்பும் மரியாளும் அவர்களுடைய பிள்ளை இயேசுவும் இருக்கிற வீட்டுக்கு மேல் வந்து நிற்கிறது.

ஜோதிடர்கள் அந்த வீட்டுக்குள் போய், சின்னப் பிள்ளையான இயேசு தன் அம்மா மரியாளுடன் இருப்பதைப் பார்க்கிறார்கள். உடனே, அவர்முன் மண்டிபோட்டு தலைவணங்குகிறார்கள். தங்கம், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகியவற்றை அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். பிறகு, அவர்கள் ஏரோதுவிடம் போகலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவனிடம் போக வேண்டாம் என்று கடவுள் அவர்களைக் கனவில் எச்சரிக்கிறார். அதனால், வேறொரு வழியாகத் தங்களுடைய நாட்டுக்குத் திரும்பிப்போகிறார்கள்.

ஜோதிடர்களுக்கு வழிகாட்டிய அந்த “நட்சத்திரத்தை” அனுப்பியது யார் என்று நினைக்கிறீர்கள்? இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: அது அந்த ஜோதிடர்களை நேரடியாக பெத்லகேமுக்கு வழிநடத்தாமல் எருசலேமுக்கு வழிநடத்தியது. அதனால், இயேசுவைக் கொல்ல நினைத்த ஏரோது ராஜாவை அவர்கள் சந்திக்கிற சூழ்நிலை உருவானது. கடவுள் மட்டும் ஜோதிடர்களை எச்சரிக்காமல் இருந்திருந்தால், இயேசுவை ஏரோது தீர்த்துக்கட்டியிருப்பான். இதிலிருந்து, கடவுளின் எதிரியான சாத்தான்தான் இயேசுவைக் கொல்வதற்காக அந்த நட்சத்திரத்தை அனுப்பினான் என்பது தெளிவாகத் தெரிகிறது.