அதிகாரம் 106
திராட்சைத் தோட்டத்தைப் பற்றிய இரண்டு உவமைகள்
மத்தேயு 21:28-46 மாற்கு 12:1-12 லூக்கா 20:9-19
-
இரண்டு மகன்களைப் பற்றிய உவமை
-
திராட்சைத் தோட்டக்காரர்களைப் பற்றிய உவமை
இயேசு இப்போதும் ஆலயத்தில்தான் இருக்கிறார். சற்று முன்புதான், எந்த அதிகாரத்தால் அவர் செயல்படுகிறார் என்று முதன்மை குருமார்களும் பெரியோர்களும் அவரிடம் கேட்டிருந்தார்கள். இயேசுவின் பதிலைக் கேட்டு அவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே எப்படிப்பட்ட ஆட்கள் என்பதைக் காட்டுவதற்கு இப்போது ஒரு உவமையை இயேசு சொல்கிறார்.
“ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர் தன்னுடைய முதல் மகனிடம் வந்து, ‘மகனே, நீ இன்றைக்குத் திராட்சைத் தோட்டத்துக்குப் போய் வேலை செய்’ என்று சொன்னார். அதற்கு அவன், ‘போக மாட்டேன்’ என்று சொன்னான். ஆனால், அதற்குப் பின்பு மனம் வருந்தி அங்கே போனான். அவர் தன் இரண்டாவது மகனிடம் வந்து அதையே சொன்னார். அதற்கு அவன், ‘போகிறேன், அப்பா’ என்று சொல்லிவிட்டு, போகாமலேயே இருந்துவிட்டான். இந்த இரண்டு பேரில் தங்களுடைய அப்பாவின் விருப்பப்படி நடந்துகொண்டது யார்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று இயேசு கேட்கிறார். (மத்தேயு 21:28-31) பதில் நமக்குத் தெரிந்ததுதான்! முதல் மகன்தான் தன் அப்பாவின் விருப்பப்படி நடந்துகொண்டான்.
இயேசு தன்னை எதிர்க்கிறவர்களைப் பார்த்து, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், வரி வசூலிப்பவர்களும் விலைமகள்களும் உங்களுக்கு முன்பே கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார். வரி வசூலிப்பவர்களும் விலைமகள்களும் ஆரம்பத்தில் கடவுளுக்குச் சேவை செய்யவில்லை. ஆனால், முதல் மகனைப் போல அவர்கள் பிற்பாடு மனம் திருந்தினார்கள்; இப்போது கடவுளுக்குச் சேவை செய்கிறார்கள். ஆனால், மதத் தலைவர்கள் இரண்டாவது மகனைப் போல இருக்கிறார்கள். கடவுளுக்குச் சேவை செய்வதாக அவர்கள் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் அதைச் செய்வதில்லை. அதனால் இயேசு அவர்களிடம், “நீதியான வழியைக் காட்ட யோவான் [ஸ்நானகர்] உங்களிடம் வந்தார், நீங்களோ அவரை நம்பவில்லை. ஆனால், வரி வசூலிப்பவர்களும் விலைமகள்களும் அவரை நம்பினார்கள்; இதைப் பார்த்த பின்பும்கூட நீங்கள் மனம் வருந்தவில்லை, அவரை நம்பவும் இல்லை” என்று சொல்கிறார்.—மத்தேயு 21:31, 32.
அடுத்ததாக, அவர் இன்னொரு உவமையைச் சொல்கிறார். மதத் தலைவர்கள் கடவுளுடைய சேவையை அலட்சியம் செய்வதோடு, படுமோசமானவர்களாகவும் இருப்பதை இந்த உவமை படம்பிடித்துக் காட்டுகிறது. “ஒரு மனுஷர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, அதைச் சுற்றிலும் வேலியடைத்தார். அதில் திராட்சரசத் தொட்டியை அமைத்து, காவலுக்கு ஒரு கோபுரத்தைக் கட்டினார். அதைத் தோட்டக்காரர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டுத் தூர தேசத்துக்குப் போனார். அறுவடைக் காலம் வந்தபோது, தனக்குச் சேர வேண்டிய பங்கை வாங்கி வரச் சொல்லி ஓர் அடிமையை அந்தத் தோட்டக்காரர்களிடம் அனுப்பினார். ஆனால், அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுங்கையோடு அனுப்பிவிட்டார்கள். அதனால், மறுபடியும் வேறொரு அடிமையை அனுப்பினார்; அவர்கள் அவனைத் தலையில் தாக்கி, அவமானப்படுத்தினார்கள். பின்பு இன்னும் ஒருவனை அனுப்பினார், அவனைக் கொன்றுபோட்டார்கள். வேறு பலரையும் அனுப்பினார்; அவர்களில் சிலரை அடித்தார்கள், சிலரைக் கொலை செய்தார்கள்” என்று சொல்கிறார்.—மாற்கு 12:1-5.
இந்த உவமை அங்கிருக்கிற மக்களுக்குப் புரிந்திருக்குமா? “பரலோகப் படைகளின் யெகோவா நானே. இஸ்ரவேல் ஜனங்கள்தான் என் திராட்சைத் தோட்டம். யூதா மக்கள்தான் நான் ஆசையோடு நட்ட திராட்சைக் கொடி. அவர்கள் நியாயமாக நடப்பார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆனால், அநியாயம்தான் செய்தார்கள்” என்று ஏசாயா மூலம் கடவுள் சொன்னது அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். (ஏசாயா 5:7) இந்த வசனத்துக்கும் இயேசு சொல்கிற உவமைக்கும் ஒற்றுமை இருக்கிறது. யெகோவாதான் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர். இஸ்ரவேல் தேசம்தான் திராட்சைத் தோட்டம்; திருச்சட்டம் ஒரு வேலியைப் போல அந்தத் தேசத்தைப் பாதுகாத்தது. தன்னுடைய மக்களுக்கு ஆலோசனை தரவும், நல்ல கனிகளைக் கொடுக்க அவர்களுக்கு உதவி செய்யவும் தீர்க்கதரிசிகளை யெகோவா அனுப்பினார்.
ஆனால், ‘தோட்டக்காரர்கள்’ தங்களிடம் அனுப்பப்பட்ட ‘அடிமைகளை’ அடித்து, கொலை செய்தார்கள். “[திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரருக்கு] ஒரு அன்பான மகன் இருந்தான்; ‘என் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று நினைத்து, கடைசியாக அவர் தன்னுடைய மகனையே அனுப்பினார். ஆனால் அந்தத் தோட்டக்காரர்கள், ‘இவன்தான் வாரிசு. வாருங்கள், நாம் இவனைத் தீர்த்துக்கட்டிவிடலாம், இவனுடைய சொத்து நமக்குக் கிடைத்துவிடும்’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு, அவனைப் பிடித்து, கொலை செய்து, திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தூக்கிப்போட்டார்கள்” என்று இயேசு சொல்கிறார்.—மாற்கு 12:6-8.
மாற்கு 12:9) அதற்கு மதத் தலைவர்கள், “அந்த அக்கிரமக்காரர்களை அடியோடு ஒழித்துக்கட்டிவிடுவார்; தனக்குச் சேர வேண்டிய பங்கைச் சரியான சமயத்தில் கொடுக்கிற வேறு தோட்டக்காரர்களிடம் திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்” என்று சொல்கிறார்கள்.—மத்தேயு 21:41.
“இப்போது, அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர் என்ன செய்வார்?” என்று இயேசு கேட்கிறார். (இப்படி, தங்களையே அறியாமல் தங்களுக்குத் தீர்ப்பு சொல்லிக்கொள்கிறார்கள். ஏனென்றால், யெகோவாவின் ‘திராட்சைத் தோட்டமான’ இஸ்ரவேல் தேசத்துக்கு அவர்களும்கூட ‘தோட்டக்காரர்களை’ போல இருக்கிறார்கள். யெகோவா அவர்களிடம் கனிகளை எதிர்பார்க்கிறார். மேசியாவான தன் மகன்மேல் விசுவாசம் வைப்பதும்கூட யெகோவா எதிர்பார்க்கிற கனிகளில் ஒன்றாக இருக்கிறது. இயேசு அந்த மதத் தலைவர்களை நேராகப் பார்த்து, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது; இது யெகோவாவின் செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’ என்ற வசனத்தை நீங்கள் வாசித்ததே இல்லையா?” என்று கேட்கிறார். (மாற்கு 12:10, 11) பிறகு அவர்களிடம், “அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கத்தின் ஆசீர்வாதங்கள் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஒரு ஜனத்திடம் கொடுக்கப்படும்” என்று அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார்.—மத்தேயு 21:43.
“தங்களை மனதில் வைத்துதான் அதை அவர் சொன்னார்” என்று வேத அறிஞர்களும் முதன்மை குருமார்களும் புரிந்துகொள்கிறார்கள். (லூக்கா 20:19) அதனால் இயேசுவை, அதாவது ‘வாரிசை,’ இனி உயிரோடு விடக் கூடாது என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு தீர்க்கதரிசி என்று மக்கள் நினைப்பதால், அவர்கள் மக்களுக்குப் பயப்படுகிறார்கள். அதனால், இயேசுவைக் கொல்ல அவர்கள் இந்தச் சமயத்தில் முயற்சி செய்வதில்லை.