அதிகாரம் 62
மனத்தாழ்மை பற்றிய ஒரு முக்கியமான பாடம்
மத்தேயு 17:22–18:5 மாற்கு 9:30-37 லூக்கா 9:43-48
-
தன்னுடைய மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார்
-
மீனின் வாயிலிருந்து எடுத்த காசை வைத்து வரி கட்டுகிறார்
-
கடவுளுடைய அரசாங்கத்தில் யார் உயர்ந்தவர்?
தோற்றம் மாறிய காட்சி முடிந்த பிறகு, பேய் பிடித்த ஒரு பையனை இயேசு குணமாக்கினார். இதற்குப் பிறகு, அவர் பிலிப்புச் செசரியா பகுதியிலிருந்து புறப்பட்டு கப்பர்நகூமை நோக்கிப் போகிறார். தன்னுடைய சீஷர்களோடு அவர் தனியாகப் பயணம் செய்கிறார். ஏனென்றால், அவர் போவது “யாருக்கும் தெரியக் கூடாதென்று” அவர் நினைக்கிறார். (மாற்கு 9:30) அதோடு, தன்னுடைய மரணத்தைப் பற்றியும், அதற்குப் பின் சீஷர்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும் பேசி அவர்கள் மனதைத் தயார்படுத்த வேண்டும் என்றும் அவர் நினைக்கிறார். இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்பட்டு, மக்களுடைய கையில் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள், ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்” என்று சொல்கிறார்.—மத்தேயு 17:22, 23.
இந்த விஷயத்தைப் பற்றி ஏற்கெனவே தன்னுடைய சீஷர்களிடம் இயேசு சொல்லியிருக்கிறார். ஆனால், இயேசு கொல்லப்படுவார் என்பதை பேதுரு அப்போது நம்பவில்லை. (மத்தேயு 16:21, 22) அதற்குப் பிறகு இயேசு தோற்றம் மாறிய சமயத்தில், அவருடைய “இறுதிப் பயணத்தை” பற்றிய விஷயங்களை மூன்று அப்போஸ்தலர்கள் கேட்டார்கள். (லூக்கா 9:31) இப்போது, அவர் சொல்வது சீஷர்களுக்கு முழுமையாகப் புரியாவிட்டாலும் அவர்கள் ‘மிகவும் துக்கப்படுகிறார்கள்.’ (மத்தேயு 17:23) ஆனால், அதைப் பற்றி இயேசுவிடம் கூடுதலாகக் கேட்பதற்குப் பயப்படுகிறார்கள்.
கடைசியில், அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்துசேர்கிறார்கள். அதுதான் இயேசுவின் ஊழியத்துக்கு மைய இடமாக இருக்கிறது. அப்போஸ்தலர்கள் பலருடைய சொந்த ஊரும் அதுதான். அங்கே, ஆலய வரி வசூலிக்கிற ஆட்கள் பேதுருவிடம் வருகிறார்கள். இயேசு வரி கட்டுவதில்லை என்று குற்றம்சாட்ட அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால், “உங்கள் போதகர் இரண்டு திராக்மா [ஆலய] வரி கட்டுகிறாரா?” என்று கேட்கிறார்கள்.—மத்தேயு 17:24.
அதற்கு பேதுரு, “ஆமாம்” என்று சொல்கிறார். இயேசு அப்போது வீட்டில் இருந்தாலும், இந்த விஷயம் அவருக்குத் தெரிந்துவிடுகிறது. அதனால் பேதுரு இதைப் பற்றிச் சொல்வதற்கு முன்பே இயேசு அவரிடம், “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? இந்த உலகத்தில் இருக்கிற ராஜாக்கள் சுங்கவரியை அல்லது தலைவரியை யாரிடம் வசூலிக்கிறார்கள்? அவர்களுடைய மகன்களிடமா, மற்றவர்களிடமா?” என்று கேட்கிறார். அதற்கு பேதுரு, “மற்றவர்களிடம்” என்று சொல்கிறார். அப்போது இயேசு, “அப்படியானால், மகன்கள் வரி கட்ட வேண்டியதில்லையே” என்கிறார்.—மத்தேயு 17:25, 26.
இயேசுவின் தகப்பன்தான் இந்தப் பிரபஞ்சத்தின் ராஜா. அவரைத்தான் எல்லாரும் ஆலயத்தில் வணங்குகிறார்கள். சட்டப்படி பார்த்தால், கடவுளின் மகனான இயேசு ஆலய வரி கட்டத் தேவையில்லை. “ஆனால், அவர்கள் நம்மேல் குற்றம் சொல்லாமல் இருப்பதற்காக, நீ கடலுக்குப் போய்த் தூண்டில் போட்டு, முதலில் சிக்கும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்; அதில் ஒரு வெள்ளிக் காசு [ஸ்தாத்தேர் காசு, டெட்ரா-திராக்மா] இருக்கும். அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடுத்துவிடு” என்று சொல்கிறார்.—மத்தேயு 17:27.
சீக்கிரத்தில் சீஷர்கள் எல்லாரும் ஒன்றுகூடி வருகிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தில் யார் உயர்ந்தவராக இருப்பார் என்று இயேசுவிடம் கேட்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சமீபத்தில், இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றிச் சொன்னபோது அவர்கள் கேள்வி கேட்க பயந்தார்கள். ஆனால், தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி கேட்க அவர்கள் பயப்படவில்லை. அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். கப்பர்நகூமுக்கு வரும் வழியில் அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றித்தான் வாக்குவாதம் செய்திருந்தார்கள். அதனால், “வழியில் எதைப் பற்றி வாக்குவாதம் செய்துகொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கிறார். (மாற்கு 9:33) சீஷர்களுக்கு ரொம்பத் தர்மசங்கடமாக இருக்கிறது. தங்களில் யார் உயர்ந்தவர் என்று வாக்குவாதம் செய்திருந்ததால், பதிலே சொல்லாமல் அமைதியாக நிற்கிறார்கள். கடைசியில் அவர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசாங்கத்தில் உண்மையில் யார் மிக உயர்ந்தவராக இருப்பார்?” என்று கேட்கிறார்கள்.—மத்தேயு 18:1.
அவர்கள் கிட்டத்தட்ட மூன்று வருஷங்களாக இயேசு நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும், தங்களில் யார் உயர்ந்தவர் என்று அவர்கள் வாக்குவாதம் செய்வது ரொம்ப விநோதமாகத் தெரியலாம். அவர்கள் எல்லாரும் பாவம் செய்கிற இயல்புள்ளவர்கள். பதவிக்கும் அந்தஸ்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற யூத சமுதாயத்தில்தான் அவர்கள் வளர்ந்திருந்தார்கள். அதோடு, சமீபத்தில்தான் பேதுருவுக்குப் பரலோக அரசாங்கத்தின் “சாவிகளை” கொடுப்பதாக இயேசு வாக்குக் கொடுத்திருந்தார். அதனால், பேதுரு தன்னைப் பெரிய ஆளாக நினைத்துக்கொள்கிறாரா? இயேசு தோற்றம் மாறியதைப் பார்த்ததால் யாக்கோபும் யோவானும் தங்களைப் பெரிய ஆட்களாக நினைத்துக்கொள்கிறார்களா?
காரணம் எதுவாக இருந்தாலும், அவர்களுடைய எண்ணத்தைச் சரிப்படுத்த வேண்டும் என்று இயேசு நினைக்கிறார். அதனால், ஒரு சின்னப் பிள்ளையைக் கூப்பிட்டு அவர்கள் நடுவில் நிற்க வைக்கிறார். பிறகு, “நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டு சின்னப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், ஒருபோதும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். இந்தச் சின்னப் பிள்ளையைப் போல் தாழ்மையாக நடந்துகொள்கிறவர்தான் பரலோக அரசாங்கத்தில் மிக உயர்ந்தவராக இருப்பார். இப்படிப்பட்ட ஒரு சின்னப் பிள்ளையை எனக்காக ஏற்றுக்கொள்கிறவர் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்” என்று சொல்கிறார்.—மத்தேயு 18:3-5.
எவ்வளவு அழகாக இயேசு கற்றுக்கொடுக்கிறார்! தன்னுடைய சீஷர்கள்மீது இயேசு கோபப்படவில்லை. அவர்களைப் பேராசைக்காரர்கள் என்றோ, பதவி ஆசை பிடித்தவர்கள் என்றோ சொல்லித் திட்டவில்லை. அதற்குப் பதிலாக, ஒரு சின்னப் பிள்ளையைக் காட்டி அவர்களுக்குக் கற்பிக்கிறார். பொதுவாக, அந்தஸ்து, பதவி பற்றியெல்லாம் சின்னப் பிள்ளைகள் யோசிக்க மாட்டார்கள். தன்னுடைய சீஷர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார். கடைசியாக அவர்களிடம், “உங்கள் எல்லாரிலும் யார் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறானோ அவனே உயர்ந்தவனாக இருப்பான்” என்று சொல்கிறார்.—லூக்கா 9:48.