அதிகாரம் 78
உண்மையுள்ள நிர்வாகி தயாராக இருக்க வேண்டும்
-
உண்மையுள்ள நிர்வாகி தயாராக இருக்க வேண்டும்
-
இயேசு பிரிவினையை உண்டாக்குவதற்காக வந்திருக்கிறார்
ஒரு ‘சிறுமந்தைக்கு’ மட்டும்தான் பரலோக அரசாங்கத்தில் இடம் கிடைக்கும் என்று இயேசு சொல்லியிருந்தார். (லூக்கா 12:32) ஆனால், அந்த மகத்தான பரிசை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்த அரசாங்கத்தில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், சரியான மனப்பான்மையோடு இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் என்று இயேசு வலியுறுத்துகிறார்.
தான் திரும்பி வரும்போது தன்னுடைய சீஷர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார். “இடுப்புப்பட்டையைக் கட்டிக்கொண்டு தயாராயிருங்கள், உங்கள் விளக்குகளை எரியவிடுங்கள். திருமண விருந்திலிருந்து தங்கள் எஜமான் திரும்பி வந்து கதவைத் தட்டியதும் அதைத் திறக்கக் காத்திருக்கிற ஆட்களைப் போல் இருங்கள். எஜமான் வரும்போது எந்த அடிமைகள் விழித்திருப்பதை அவர் பார்க்கிறாரோ அந்த அடிமைகளே சந்தோஷமானவர்கள்!” என்று இயேசு தன் சீஷர்களிடம் சொல்கிறார்.—லூக்கா 12:35-37.
எப்படிப்பட்ட மனப்பான்மை தேவை என்பதை இயேசுவின் சீஷர்கள் இந்த உவமையிலிருந்து எளிதில் புரிந்துகொள்கிறார்கள். இந்த உவமையில் சொல்லப்பட்ட அடிமைகள் தங்கள் எஜமானுக்காகக் காத்துக்கொண்டு, தயாராக இருக்கிறார்கள். “[எஜமான்] இரண்டாம் ஜாமத்திலாவது [இரவு ஒன்பது மணியிலிருந்து நடுராத்திரிவரை] மூன்றாம் ஜாமத்திலாவது [நடுராத்திரியிலிருந்து விடியற்காலை மூன்று மணிவரை] வரும்போது யாரெல்லாம் தயாராக இருப்பதைப் பார்க்கிறாரோ அவர்களெல்லாம் சந்தோஷமானவர்கள்!” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 12:38.
வீட்டு வேலைக்காரர்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இயேசு இங்கே ஆலோசனை கொடுத்துக்கொண்டில்லை. ஏனென்றால், இந்த உவமையில் அடுத்ததாக மனிதகுமாரனான தன்னைப் பற்றிச் சொல்கிறார். அவர் தன்னுடைய சீஷர்களிடம், “நீங்களும் தயாராயிருங்கள்; ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார்” என்று சொல்கிறார். (லூக்கா 12:40) எதிர்காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் இயேசு வருவார். அப்போது தன்னுடைய சீஷர்கள், குறிப்பாக ‘சிறுமந்தையை’ சேர்ந்தவர்கள், தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
இந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேதுரு ஆசைப்படுகிறார். அதனால், “எஜமானே, இந்த உவமையை எங்களுக்கு மட்டும் சொல்கிறீர்களா அல்லது எல்லாருக்கும் சொல்கிறீர்களா?” என்று இயேசுவிடம் கேட்கிறார். பேதுருவுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், அது சம்பந்தமான ஒரு உவமையை இயேசு சொல்கிறார். “தன் வீட்டுப் பணியாளர்களுக்கு போதுமான உணவை ஏற்ற வேளையில் கொடுத்து வருவதற்காக எஜமான் நியமிக்கப்போகிற உண்மையும் விவேகமும் உள்ள நிர்வாகி யார்? எஜமான் வரும்போது அப்படிச் செய்துகொண்டிருக்கிற அடிமையே சந்தோஷமானவன்! உண்மையிலேயே உங்களுக்குச் சொல்கிறேன், அவர் தன்னுடைய உடைமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அவனை நியமிப்பார்” என்று சொல்கிறார்.—லூக்கா 12:41-44.
இதற்கு முன்பு சொன்ன உவமையில், “எஜமான்” என்பது மனிதகுமாரனான இயேசுவைக் குறிக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. அதனால், ‘உண்மையுள்ள நிர்வாகி’ என்பது பரலோக அரசாங்கத்தைப் பெறப்போகிற ‘சிறுமந்தையின்’ ஒரு பாகத்தைக் குறிக்கிறது என்ற முடிவுக்கு வருகிறோம். (லூக்கா 12:32) சிறுமந்தையைச் சேர்ந்த சிலர் ஒரு குழுவாக, “தன் வீட்டுப் பணியாளர்களுக்கு போதுமான உணவை ஏற்ற வேளையில்” கொடுப்பார்கள் என்று இயேசு சொல்கிறார். இப்போது இயேசுவே தன் சீஷர்களுக்கு ஆன்மீக உணவை நேரடியாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இயேசு சொன்னதை வைத்து, எதிர்காலத்தில் ஏதோவொரு சமயத்தில் மனிதகுமாரன் வருவார் என்பதை பேதுருவும் அங்கிருக்கிற மற்ற சீஷர்களும் புரிந்துகொள்கிறார்கள். அந்தச் சமயத்தில், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு, அதாவது எஜமானின் “வீட்டுப் பணியாளர்களுக்கு,” ஆன்மீக உணவைக் கொடுக்க வேறொரு ஏற்பாடு இருக்கும்.
தன்னுடைய சீஷர்கள் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ஏன் சரியான மனப்பான்மையோடு இருக்க வேண்டும் என்பதற்கான வேறொரு காரணத்தையும் இயேசு எடுத்துச் சொல்கிறார். அவர்கள் கவனமாக இல்லாவிட்டால் ஏனோதானோ என்று நடக்க ஆரம்பித்துவிடலாம், தங்களுடைய சகோதர சகோதரிகளையே எதிர்க்கிற அளவுக்குப் போய்விடலாம். “அந்த அடிமை, ‘என்னுடைய எஜமான் வரத் தாமதிக்கிறார்’ என்று தன் இதயத்தில் சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிட்டுக் குடித்து வெறிக்கவும் ஆரம்பித்தால், அவன் எதிர்பார்க்காத நாளில், அவனுக்குத் லூக்கா 12:45, 46.
தெரியாத நேரத்தில் அவனுடைய எஜமான் வந்து அவனை மிகக் கடுமையாகத் தண்டிப்பார்; உண்மையாக நடக்காதவர்களுக்கு ஏற்படும் அதே கதிதான் அவனுக்கும் ஏற்படும்” என்று இயேசு அவர்களை எச்சரிக்கிறார்.—அடுத்ததாக, “பூமியில் நான் தீ மூட்ட வந்தேன்” என்று இயேசு சொல்கிறார். அதை அவர் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். அவர் பேசிய சில விஷயங்களால் ஏற்பட்ட சர்ச்சைகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தன. பொய் போதனைகளும் பாரம்பரியங்களும் அந்தத் தீயில் பொசுங்கின. ஒற்றுமையாக இருக்க வேண்டிய ஆட்களுக்கு இடையில் இது பிரிவினைகளை ஏற்படுத்தியது. “அப்பாவுக்கு விரோதமாக மகனும், மகனுக்கு விரோதமாக அப்பாவும், மகளுக்கு விரோதமாக அம்மாவும், அம்மாவுக்கு விரோதமாக மகளும், மருமகளுக்கு விரோதமாக மாமியாரும், மாமியாருக்கு விரோதமாக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 12:49, 53.
இதுவரை இயேசு தன் சீஷர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். இப்போது, அங்கிருக்கிற மக்களிடம் அவர் பேச ஆரம்பிக்கிறார். அவர்தான் மேசியா என்பதற்கான அத்தாட்சிகளை ஏற்றுக்கொள்ள பெரும்பாலான மக்கள் வேண்டுமென்றே மறுத்திருந்தார்கள். அதனால் அவர் அந்தக் கூட்டத்தாரிடம், “மேற்கில் மேகம் திரண்டு வருவதைப் பார்க்கும்போது, ‘புயல் அடிக்கும்’ என்று உடனடியாகச் சொல்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்றடிப்பதைப் பார்க்கும்போது, ‘அனல்காற்று வீசும்’ என்று சொல்கிறீர்கள்; அதுவும் அப்படியே நடக்கிறது. வெளிவேஷக்காரர்களே, பூமியையும் வானத்தையும் பார்த்து உங்களால் வானிலையைத் தெரிந்துகொள்ள முடிகிறதே, இந்தக் காலத்தில் நடக்கிற காரியங்களின் அர்த்தத்தை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை?” என்று கேட்கிறார். (லூக்கா 12:54-56) இதிலிருந்து, மேசியாவை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.