அதிகாரம் 74
உபசரிப்பதும் ஜெபம் செய்வதும்
-
மார்த்தாளையும் மரியாளையும் இயேசு சந்திக்கிறார்
-
விடாமல் ஜெபம் செய்வது முக்கியம்
எருசலேமிலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஒலிவ மலையின் கிழக்கு மலைச்சரிவில், பெத்தானியா இருக்கிறது. (யோவான் 11:18) அந்தக் கிராமத்தில், மார்த்தாள், மரியாள் என்ற இரண்டு சகோதரிகள் வாழ்கிறார்கள். அவர்களுடைய வீட்டுக்கு இயேசு போகிறார். அவர்களும் அவர்களுடைய சகோதரர் லாசருவும் இயேசுவின் நண்பர்கள். அவர்கள் இயேசுவை அன்போடு வரவேற்கிறார்கள்.
மேசியா தங்கள் வீட்டுக்கு வந்ததை அவர்கள் பெரிய பாக்கியமாக நினைக்கிறார்கள். இயேசுவை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று மார்த்தாள் ஆசைப்படுகிறாள். அதனால், அவருக்காகத் தடபுடலாக விருந்தை ஏற்பாடு செய்கிறாள். அவள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, அவளுடைய சகோதரி மரியாள் இயேசுவின் காலடியில் உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். கொஞ்ச நேரம் கழித்து மார்த்தாள் இயேசுவிடம் போய், “என் சகோதரி என்னைத் தனியாக வேலை செய்ய விட்டுவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளிடம் சொல்லுங்கள்” என்கிறாள்.—லூக்கா 10:40.
ஆனால், மரியாளை இயேசு கண்டிக்கவில்லை. அதற்குப் பதிலாக, சமையல் செய்வதைப் பற்றி அளவுக்கதிகமாகக் கவலைப்படத் தேவையில்லை என்று மார்த்தாளுக்குப் புத்தி சொல்கிறார். “மார்த்தாள், மார்த்தாள், நீ நிறைய காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடுகிறாய். கொஞ்சம் இருந்தாலே போதும், ஒன்றே ஒன்றுகூடப் போதும். மரியாளைப் பொறுத்தவரை, அவள் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்கிறார். (லூக்கா 10:41, 42) வகைவகையாகச் சமைப்பதற்காக நிறைய நேரத்தைச் செலவழிக்க வேண்டாம், சாதாரண உணவே போதும் என்று சொல்கிறார்.
இயேசுவை உபசரிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் மார்த்தாள் இதையெல்லாம் செய்கிறாள். ஆனால், சமையல் வேலையிலேயே மும்முரமாக இருப்பதால், கடவுளுடைய மகனிடமிருந்து முக்கியமான விஷயங்களை அவளால் கற்றுக்கொள்ள முடியவில்லை. மரியாள் நல்ல முடிவை எடுத்ததாக இயேசு சொல்கிறார். இயேசுவிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் அவளுக்குப் பிரயோஜனமாக இருக்கும். அவள் எடுத்த முடிவிலிருந்து நாம் எல்லாருமே முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்.
இன்னொரு சமயம், வேறொரு முக்கியப் பாடத்தை இயேசு கற்றுக்கொடுக்கிறார். சீஷர்களில் ஒருவர் அவரிடம் வந்து, “எஜமானே, யோவான் தன்னுடைய சீஷர்களுக்கு ஜெபம் செய்யக் கற்றுக்கொடுத்தது போல நீங்களும் எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று கேட்கிறார். (லூக்கா 11:1) கிட்டத்தட்ட ஒன்றரை வருஷங்களுக்கு முன்பு மலைப்பிரசங்கத்தைக் கொடுத்தபோது, எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்று இயேசு கற்றுக்கொடுத்திருந்தார். (மத்தேயு 6:9-13) ஒருவேளை, இயேசு மலைப்பிரசங்கத்தைக் கொடுத்தபோது அந்தச் சீஷர் அங்கே இருந்திருக்க மாட்டார். அதனால், ஜெபம் செய்வது சம்பந்தமான முக்கியக் குறிப்புகளை இயேசு மறுபடியும் சொல்கிறார். பிறகு, விடாமல் ஜெபம் செய்வது ஏன் அவசியம் என்பதைப் புரிய வைப்பதற்காக ஒரு உவமையைச் சொல்கிறார்.
“உங்களில் ஒருவன் நடுராத்திரியில் தன்னுடைய நண்பனிடம் போய், ‘நண்பா, மூன்று ரொட்டிகளை எனக்குக் கடனாகக் கொடு. ஏனென்றால், என்னுடைய நண்பன் ஒருவன் பயணம் செய்கிற வழியில் என்னிடம் வந்திருக்கிறான். அவனுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை’ என்று சொல்கிறான். ஆனால் அந்த நண்பன் உள்ளே இருந்துகொண்டு, ‘என்னைத் தொந்தரவு செய்யாதே. ஏற்கெனவே கதவைப் பூட்டிவிட்டேன். என் குழந்தைகளும் நானும் படுத்துவிட்டோம். நான் எழுந்துவந்து எதுவும் கொடுக்க முடியாது’ என்று சொல்கிறான். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன்னுடைய நண்பன் என்பதற்காக அவன் எழுந்துவந்து எதையாவது கொடுக்காவிட்டாலும், அவன் விடாப்பிடியாகக் கேட்கிறான் என்பதற்காகவாவது எழுந்துவந்து அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான்.”—லூக்கா 11:5-8.
இந்த நண்பனைப் போல, யெகோவாவும் நாம் கேட்பதைத் தர மறுக்கிறார் என்று இயேசு சொல்லவில்லை. உதவி செய்யத் தயங்குகிற ஒரு நண்பனே, ஒருவர் திரும்பத் திரும்பக் கேட்கும்போது உதவி செய்வான் என்றால், அன்பான பரலோகத் தகப்பன் தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களின் ஊக்கமான ஜெபங்களுக்கு இன்னும் எந்தளவு பதில் தருவார் என்றுதான் இயேசு சொல்கிறார். அதோடு, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள். தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான், தேடுகிற ஒவ்வொருவனும் கண்டுபிடிக்கிறான், தட்டுகிற ஒவ்வொருவனுக்கும் திறக்கப்படும்” என்றும் சொல்கிறார்.—லூக்கா 11:9, 10.
லூக்கா 11:11-13) நம்முடைய தகப்பன் நம் ஜெபத்தைக் கேட்டு நமக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறார். இதைத் தெரிந்துகொள்வது நம் மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!
இந்தக் குறிப்பை வலியுறுத்துவதற்காகப் பரலோகத் தகப்பனை மனித தகப்பன்களோடு இயேசு ஒப்பிடுகிறார். “உங்களில் எந்த அப்பாவாவது தன் மகன் மீனைக் கேட்டால், மீனுக்குப் பதிலாக அவனுக்குப் பாம்பைக் கொடுப்பாரா? அல்லது முட்டையைக் கேட்டால், தேளைக் கொடுப்பாரா? அப்படியானால், பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, பரலோகத் தகப்பன் தன்னிடம் கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை இன்னும் எந்தளவு கொடுப்பார்!” என்று சொல்கிறார். (