பாடம் 2
கடவுள் யார்?
1. கடவுளை ஏன் வணங்க வேண்டும்?
கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார். அவருக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. (சங்கீதம் 90:2) பைபிளில் இருக்கிற சந்தோஷமான செய்தியை சொன்னது அவர்தான். (1 தீமோத்தேயு 1:11) நமக்கு உயிர் கொடுத்தது அவர்தான். அதனால், அவரை மட்டும்தான் நாம் வணங்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 4:11-ஐ வாசியுங்கள்.
2. கடவுள் எப்படிப்பட்டவர்?
மனிதர்கள் யாரும் கடவுளைப் பார்த்ததில்லை. ஏனென்றால், நமக்கு இருப்பதைப் போன்ற உடல் அவருக்கு இல்லை. (யோவான் 1:18; 4:24) ஆனால், அவர் படைத்திருப்பதை வைத்தே அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். விதவிதமான பழங்கள், பூக்களை எல்லாம் பார்க்கும்போது அவருக்கு எவ்வளவு அன்பும், ஞானமும் இருக்கிறது என்று தெரிகிறது. இந்த வானம், பூமியை எல்லாம் பார்க்கும்போது அவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.—ரோமர் 1:20-ஐ வாசியுங்கள்.
பைபிளைப் படித்தால் கடவுளைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக கடவுளுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, ஜனங்களிடம் எப்படி நடந்துகொள்கிறார், அவர்கள் நல்லது செய்யும்போது என்ன செய்கிறார், கெட்டது செய்யும்போது என்ன செய்கிறார் என்றெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.—சங்கீதம் 103:7-10-ஐ வாசியுங்கள்.
3. கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறதா?
“பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:9) கடவுளை கர்த்தர், ஆண்டவர், இறைவன் என்றெல்லாம் ஜனங்கள் சொன்னாலும், கடவுளுக்கென்று ஒரு பெயர் இருக்கிறது. அந்த பெயர்தான் “யெகோவா.”—சங்கீதம் 83:18-ஐ வாசியுங்கள்.
பைபிளை எழுதியபோது அதில் 7,000 தடவைக்கும் மேல் கடவுளுடைய பெயர் இருந்தது. இன்று நிறைய பைபிளில் கடவுளுடைய பெயர் இல்லை. அவருடைய பெயரை எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக கர்த்தர், ஆண்டவர் என்று மாற்றியிருக்கிறார்கள். ஆனால், ஜனங்களுக்கு கடவுளைப் பற்றி சொல்லிக்கொடுத்தபோது கடவுளுடைய பெயரை இயேசு பயன்படுத்தினார்.—யோவான் 17:26-ஐ வாசியுங்கள்.
கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கா? என்ற வீடியோவைப் பாருங்கள்.
4. கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறதா?
இன்று நிறையப் பேர் கஷ்டப்படுகிறார்கள், அதனால் கடவுளுக்கு நம்மீது அக்கறை இல்லை என்று நினைக்கிறார்கள். கடவுள்தான் நம்மை சோதிக்கிறார், அதாவது கஷ்டம் கொடுக்கிறார் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இது உண்மை இல்லை.—யாக்கோபு 1:13-ஐ வாசியுங்கள்.
யெகோவா, அவரை வணங்கும்படி யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. சொந்தமாக யோசித்து முடிவு எடுக்கிற திறமையோடுதான் நம்மை படைத்திருக்கிறார். (யோசுவா 24:15) இந்த திறமையை நிறையப் பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள்; அநியாயம், அக்கிரமம் செய்கிறார்கள். அதனால்தான் இந்த உலகத்தில் இன்று இவ்வளவு கஷ்டம் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து யெகோவா ரொம்பவே வருத்தப்படுகிறார்.—ஆதியாகமம் 6:5, 6-ஐ வாசியுங்கள்.
யெகோவா நம்மீது ரொம்ப அக்கறை வைத்திருக்கிறார். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். அதனால், நாம் அனுபவிக்கிற எல்லா கஷ்டங்களையும் சீக்கிரத்தில் தீர்க்கப்போகிறார். நம்மை கஷ்டப்படுத்துகிற ஆட்களையும் அழிக்கப்போகிறார். ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் இந்த கஷ்டத்தையெல்லாம் கடவுள் கொஞ்ச நாட்களுக்கு விட்டு வைத்திருக்கிறார். அதைப் பற்றி 8-வது பாடத்தில் நாம் படித்து தெரிந்துகொள்வோம்.—2 பேதுரு 2:9; 3:7, 13-ஐ வாசியுங்கள்.
5. கடவுளுடைய நண்பர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?
நம் ஒவ்வொருவர் மீதும் யெகோவா ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். நாம் அவரிடம் பேச வேண்டும், அதாவது ஜெபம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். (சங்கீதம் 65:2; 145:18) அவருக்கு பிரியமாக வாழ நாம் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் அவர் பார்க்கிறார். சிலசமயம் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் தவறு செய்துவிடலாம். இருந்தாலும், அவர் தாராளமாக மன்னிக்கிறார். அதனால், நம்மிடம் நிறைய குறைகள் இருந்தாலும் நாம் அவருடைய நண்பராக முடியும்.—சங்கீதம் 103:12-14-ஐயும் யாக்கோபு 4:8-ஐயும் வாசியுங்கள்.
யெகோவாதான் நமக்கு உயிர் கொடுத்தார். அதனால் இந்த உலகத்திலேயே அவர்மீதுதான் நாம் அதிகமாக அன்பு காட்ட வேண்டும். (மாற்கு 12:30) அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். அவர் சொல்வது போல் நடக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் நாம் அவருடைய நண்பராக முடியும்.—1 தீமோத்தேயு 2:4-ஐயும் 1 யோவான் 5:3-ஐயும் வாசியுங்கள்.