பாடம் 13
மதங்களுக்கு என்ன நடக்கும்?
1. எல்லா மதமும் நல்ல மதமா?
எல்லா மதத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். கடவுள் அவர்கள்மீதும் அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார். ஆனால், மதங்கள் கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு நிறைய அட்டூழியங்களை செய்கின்றன. (2 கொரிந்தியர் 4:3, 4; 11:13-15) தீவிரவாதம், இனப்படுகொலை, போர் போன்றவற்றில் ஈடுபடுகின்றன. அதோடு, பக்திமான்கள் போல் காட்டிக்கொள்கிற சிலர் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமைகள் செய்கிறார்கள். இப்படிப்பட்ட செய்திகளை தினமும் கேள்விப்படுகிறோம். உண்மையிலேயே கடவுள் பக்தி உள்ளவர்கள் இதைக் கேட்டு மனம் உடைந்து போகிறார்கள்.—மத்தேயு 24:3-5, 11, 12-ஐ வாசியுங்கள்.
உண்மை மதம் கடவுளுக்கு புகழ் சேர்க்கிறது. ஆனால், பொய் மதம் கடவுளுடைய மனதை வேதனைப்படுத்துகிறது. பைபிளில் இல்லாத விஷயங்களை ஜனங்களுக்குச் சொல்லித்தருகிறது. உதாரணமாக, கடவுளைப் பற்றியும் இறந்தவர்களைப் பற்றியும் தவறாக கற்றுக்கொடுக்கிறது. ஆனால், தன்னைப் பற்றி ஜனங்கள் சரியாக தெரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார்.—பிரசங்கி 9:5, 10-ஐயும் 1 தீமோத்தேயு 2:3-5-ஐயும் வாசியுங்கள்.
2. மதங்களுக்கு என்ன நடக்கும்?
கடவுள்மீது பக்தியாக இருப்பது போல் மதங்கள் காட்டிக்கொண்டு, இந்த உலகத்தில் இருக்கும் கெட்ட ஜனங்களுடன் சேர்ந்து மோசமான செயல்களை செய்கின்றன. அதைப் பார்த்து கடவுள் ஏமாற மாட்டார். (யாக்கோபு 4:4) இன்று இருக்கிற எல்லா பொய் மதங்களையும் ‘மகா பாபிலோன்’ என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், நோவாவின் காலத்தில் பெருவெள்ளம் வந்ததற்குப் பிறகு பாபிலோன் நகரத்தில் பொய் மதம் உருவானது. மக்களை ஏமாற்றி, அவர்களை கஷ்டப்படுத்துகிற எல்லா பொய் மதங்களையும் கடவுள் சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார்.—வெளிப்படுத்துதல் 17:1, 2, 5, 16, 17; 18:8-ஐ வாசியுங்கள்.
ஆனால், பொய் மதங்களில் இருக்கிற நல்லவர்களை கடவுள் மறக்கவில்லை. அவர்களுக்கு உண்மை எதுவென்று சொல்லிக்கொடுத்து, அவர்கள் எல்லாரையும் ஒரே குடும்பமாக ஒன்று சேர்க்கிறார்.—மீகா 4:2, 5-ஐ வாசியுங்கள்.
3. நல்லவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுபவர்களையும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களையும் கடவுளுக்கு ரொம்ப பிடிக்கும். பொய் மதத்தைவிட்டு உடனே வெளியே வரச் சொல்லி அவர்களிடம் கடவுள் சொல்கிறார். அவர்மீது அன்பு வைக்கிறவர்கள் இதைச் செய்கிறார்கள், அவருக்கு பிடித்த மாதிரி அவர்களை மாற்றிக்கொள்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 18:4-ஐ வாசியுங்கள்.
கடவுளைப் பற்றி இயேசுவின் சீடர்கள் சொன்னபோது நல்ல ஜனங்கள் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். கடவுளுக்கு பிடித்த மாதிரி எப்படி நடக்க வேண்டுமென்று கற்றுக்கொண்டார்கள். வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டார்கள், சந்தோஷமான எதிர்காலத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டார்கள். நாமும் அவர்களைப் போலவே யெகோவாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்.—1 தெசலோனிக்கேயர் 1:8, 9; 2:13-ஐ வாசியுங்கள்.
யெகோவாவை வணங்குகிற ஜனங்கள் இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் ஒரே குடும்பம் போல் இருக்கிறார்கள். பொய் மதத்தைவிட்டு வருகிற எல்லாரையும் யெகோவா அந்த குடும்பத்தில் ஏற்றுக்கொள்கிறார். நீங்களும் அந்த குடும்பத்தில் ஒருவராக ஆகும்போது யெகோவாவுடைய நண்பராக இருப்பீர்கள். எதிர்காலத்தில் சாவில்லாத வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.—மாற்கு 10:29, 30-ஐயும் 2 கொரிந்தியர் 6:17, 18-ஐயும் வாசியுங்கள்.
4. எல்லா ஜனங்களும் சந்தோஷமாக இருக்க கடவுள் என்ன செய்யப்போகிறார்?
பொய் மதங்களை கடவுள் சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார். அதற்குப் பிறகு பொய் மதங்களால் மக்கள் ஏமாற்றப்பட மாட்டார்கள். தேவையில்லாத சடங்கு சம்பிரதாயங்களை செய்ய சொல்லி ஜனங்களை மதங்கள் கட்டாயப்படுத்த முடியாது. மதத்தின் பெயரில் ஜனங்களை பிரிக்க முடியாது. இந்தப் பூமியில் இருக்கிற எல்லாரும் உண்மையான கடவுளை ஒன்று சேர்ந்து வணங்குவார்கள்.—வெளிப்படுத்துதல் 18:20, 21; 21:3, 4-ஐ வாசியுங்கள்.