பகுதி 3
ஜலப்பிரளயத்திலிருந்து மனித இனம் உயிர்தப்புகிறது
பொல்லாத உலகத்தைக் கடவுள் அழிக்கிறார், ஆனால் நோவாவையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார்
பூமியில் மனிதர்கள் பெருகப்பெருக, அநியாயமும் அக்கிரமமும் தீ போல் பரவின. அக்காலத்தில் ஏனோக்கு என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் கடவுள்பக்தி மிக்கவர். அவர் ஒருவரே யெகோவாவின் தீர்க்கதரிசி; பொல்லாதவர்களைக் கடவுள் அழிக்கப்போவதாக ஜனங்களுக்கு எச்சரித்தார். ஆனால், அக்கிரமம் குறைந்தபாடில்லை, இன்னும் அதிகமாகிக் கொண்டுதான் போனது. விண்ணுலகத்திலுள்ள தூதர்கள் சிலரும் யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்; பேராசைபிடித்த அந்தத் தூதர்கள் மனித உருவெடுத்து, பூமிக்கு வந்து, பெண்களைத் தங்கள் மனைவிகளாக்கிக் கொண்டார்கள். இயற்கைக்கு மாறான இந்த இனச்சேர்க்கையால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் இராட்சதர்களாய் ஆனார்கள். எனவே, பூமியில் வன்முறையும் கொலைவெறியும் தாண்டவமாடின. தாம் ஆசையாய் படைத்த மனிதர்கள் பாழாய்ப்போனதைக் கண்டு கடவுள் மிகவும் நொந்துபோனார்.
ஏனோக்கு இறந்த பிறகு உலகமே பொல்லாதவர்களால் நிறைந்திருந்தது. ஆனால், ஒருவர் மட்டும் மாறுபட்டவராக இருந்தார். அவர்தான் நோவா. அவரும் அவருடைய குடும்பத்தாரும் கடவுளுக்குப் பிரியமாக வாழ்ந்தார்கள். அதனால், பொல்லாதவர்களை அழிக்கவும் நோவாவையும் மற்ற உயிரினங்களையும் காப்பாற்றவும் கடவுள் தீர்மானித்தார். அதற்காக ஒரு பேழையை, அதாவது பெரிய நீள்சதுர கப்பலை, கட்டும்படி நோவாவிடம் கடவுள் கூறினார். கடவுள் சொன்னபடியே நோவா செய்தார். அந்தக் கப்பலைக் கட்டி முடிப்பதற்கு ஏறக்குறைய 40 அல்லது 50 வருடங்கள் எடுத்தன. கப்பல் கட்டுவதோடு, நீதியின் பாதையில் நடக்கும்படி மக்களுக்கு நோவா ‘பிரசங்கித்தும்’ வந்தார். (2 பேதுரு 2:5) ஜலப்பிரளயம் வரப்போவதாக மக்களை எச்சரித்தார்; ஆனால் அவர்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் விலங்கினங்களும் பேழைக்குள் போக வேண்டிய வேளை வந்தது. எல்லா(ரு)ம் உள்ளே நுழைந்த பிறகு பேழையின் கதவைக் கடவுள் அடைத்தார். பின்பு, மழை கொட்ட ஆரம்பித்தது.
இரவும் பகலும் 40 நாட்கள் அடைமழை பெய்தது. முழு பூமியும் தண்ணீரில் மூழ்கியது. கெட்டவர்கள் அனைவரும் ஜலசமாதியானார்கள். பல மாதங்கள் கழித்து, தண்ணீர் குறைந்தபோது அந்தப் பேழை ஒரு மலைமேல் வந்து நின்றது. ஒரு வருடகாலம் கப்பலுக்குள்ளே இருந்தவர்கள் வெளியே வந்தார்கள். நன்றி தெரிவிக்கும் வகையில் யெகோவாவுக்கு நோவா பலி செலுத்தினார். கடவுளும் அந்தப் பலியை ஏற்றுக்கொண்டார். இனி ஒருபோதும் பூமியிலுள்ள உயிர்களை ஜலத்தினால் அழிக்கப்போவதில்லை என்று நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் யெகோவா வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதிக்கு அடையாளமாக வானவில்லை தோன்றச் செய்தார்.
ஜலப்பிரளயத்துக்குப்பின் மனிதர்களுக்குச் சில புதிய கட்டளைகளைக் கடவுள் கொடுத்தார். மிருகங்களை அடித்து சாப்பிட அவர்களுக்கு அனுமதி அளித்தார். ஆனாலும், இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது என்று தடை விதித்தார். பூமியெங்கும் பரவிச் செல்லும்படி நோவாவின் சந்ததியாருக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவர்களில் சிலர் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. நிம்ரோது என்பவனுடைய தலைமையில் பாபேல் (பின்னர், பாபிலோன் என அழைக்கப்பட்டது) நகரத்தில் அவர்கள் ஒரு பெரிய கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள். பூமியெங்கும் பரவிச் செல்லும்படி கடவுள் கொடுத்த கட்டளைக்கு விரோதமாகச் செயல்பட்டார்கள். ஆனால், அந்தக் கலகக்காரர்களுடைய மொழியைக் குழப்பி அவர்கள் போட்ட திட்டத்தைக் கடவுள் முறியடித்தார். அதுவரை ஒரே மொழி பேசி வந்தவர்கள் திடீரென பல மொழிகளைப் பேசினார்கள். இதன் விளைவாக, ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்துகொள்ள முடியாமல்போனது. கடைசியில், கோபுரம் கட்டுவதை விட்டுவிட்டு அவர்கள் எல்லாரும் பூமியெங்கும் சிதறிப்போனார்கள்.
—ஆதாரம்: ஆதியாகமம் 6–11 அதிகாரங்கள்; யூதா 14 & 15.