Skip to content

பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

நம் பாவங்கள் மன்னிக்கப்படுமா?

கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடப்பது ரொம்பக் கஷ்டம் கிடையாது

மனிதர்கள் எல்லாருமே பாவ இயல்புள்ளவர்கள் என்று பைபிள் சொல்கிறது. முதல் மனிதனான ஆதாமிடமிருந்துதான் அந்தப் பாவ இயல்பு நம் எல்லாருக்கும் வந்தது. அதனால்தான் சிலசமயம் நாம் தவறு செய்துவிடுகிறோம். பிற்பாடு அதை நினைத்து நாம் ஒருவேளை வருத்தப்படலாம். கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்து நம் பாவங்களைப் போக்குவதற்காகத் தன் உயிரையே மீட்புவிலையாகக் கொடுத்தார். அதன் மூலம் நமக்கு மன்னிப்புக் கிடைக்கும். மீட்புவிலை கடவுள் தந்திருக்கும் அன்பளிப்பு.ரோமர் 3:23, 24-ஐ வாசியுங்கள்.

சிலர் படுமோசமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் கடவுள் மன்னிப்பாரா என்று யோசிக்கிறார்கள். சந்தோஷமான விஷயம் என்னவென்றால், “இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்கும்” என்று கடவுளுடைய புத்தகம் சொல்கிறது. (1 யோவான் 1:7) நாம் உண்மையிலேயே மனம் திருந்தினால் படுமோசமான பாவங்களைக்கூட யெகோவா மனப்பூர்வமாக மன்னிப்பார்.ஏசாயா 1:18-ஐ வாசியுங்கள்.

மன்னிப்புக் கிடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

யெகோவா நம்மை மன்னிக்க வேண்டுமென்றால் நாம் அவரைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் நம்மை என்ன செய்யச் சொல்கிறார், எப்படி வாழச் சொல்கிறார் என்றெல்லாம்கூட தெரிந்துகொள்ள வேண்டும். (யோவான் 17:3) தப்பை உணர்ந்து, திருந்தி வாழ முயற்சி செய்கிறவர்களை யெகோவா தாராளமாக மன்னிக்கிறார்.அப்போஸ்தலர் 3:19-ஐ வாசியுங்கள்.

கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடப்பது ரொம்பக் கஷ்டம் கிடையாது. யெகோவா நம் பலவீனங்களைப் புரிந்துகொள்கிறார். அவர் ரொம்ப இரக்கமானவர், அன்பானவர். அப்படிப்பட்ட கடவுளுடைய மனதை நீங்கள் எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா?சங்கீதம் 103:13, 14-ஐ வாசியுங்கள்.