பாடம் 12
நாங்கள் எப்படி ஊழியம் செய்கிறோம்?
இயேசு இறப்பதற்கு முன்பு, “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று சொன்னார். (மத்தேயு 24:14) இந்த வேலையை உலகம் முழுவதும் நாங்கள் எப்படி செய்கிறோம்? இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது எப்படி ஊழியம் செய்தாரோ அதேபோல்தான் நாங்களும் செய்கிறோம்.—லூக்கா 8:1.
ஜனங்களை வீட்டில் போய் பார்க்கிறோம். வீடு வீடாகப் போய் கடவுளுடைய ஆட்சியைப் பற்றி பேச இயேசு சீடர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். (மத்தேயு 10:11-13; அப்போஸ்தலர் 5:42; 20:20) எந்த இடத்தில் ஊழியம் செய்யச் சொன்னாரோ அந்த இடத்தில்தான் சீடர்கள் ஊழியம் செய்தார்கள். (மத்தேயு 10:5, 6; 2 கொரிந்தியர் 10:13) இன்றும் அவர்களைப் போலவே நாங்கள் ஊழியத்தை ஒழுங்காக செய்கிறோம். எங்கள் சபைகளுக்குப் பிரித்து கொடுத்த இடத்தில் மட்டும்தான் ஊழியம் செய்கிறோம். இப்படி செய்வதால்தான் இயேசு சொன்னது போல் ‘மக்களிடம் பிரசங்கிக்கவும் முழுமையாக சாட்சி கொடுக்கவும்’ முடிகிறது.—அப்போஸ்தலர் 10:42.
ஜனங்களை எங்கெல்லாம் பார்கிறோமோ அங்கெல்லாம் பேசுகிறோம். இயேசு எங்கெல்லாம் ஜனங்களைப் பார்த்தாரோ அங்கெல்லாம் பேசினார். உதாரணமாக, கடற்கரையில் இருந்தவர்களிடம், கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தவர்களிடம் இயேசு பேசினார். (மாற்கு 4:1; யோவான் 4:5-15) இன்று நாங்களும் கடையில், பூங்காவில், தெருவில்... என ஜனங்களை எங்கெல்லாம் பார்க்கிறோமோ அங்கெல்லாம் பைபிளைப் பற்றி பேசுகிறோம். ஃபோனிலும் பைபிளைப் பற்றி பேசுகிறோம். அக்கம்பக்கத்தில் குடியிருக்கிறவர்கள், எங்களோடு வேலை செய்கிறவர்கள், கூட படிக்கிறவர்கள், சொந்தக்காரர்கள்... என எல்லாரிடமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேசுகிறோம். இதனால், கடவுள் சொல்லியிருக்கிற “மீட்பைப் பற்றிய நல்ல செய்தியை” உலகம் முழுவதும் இருக்கிற லட்சக்கணக்கான ஜனங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது.—சங்கீதம் 96:2.
கடவுளுடைய ஆட்சியைப் பற்றியும் எதிர்காலத்தில் நமக்கு கிடைக்கப் போகிற நல்ல வாழ்க்கையைப் பற்றியும் யாரிடம் முதலில் சொல்ல ஆசைப்படுகிறீர்கள்? நீங்கள் தெரிந்துகொண்ட விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களிடம் சொல்லுங்கள்.
-
எந்த செய்தியை எல்லாருக்கும் சொல்ல வேண்டும்?
-
யெகோவாவின் சாட்சிகள் இன்று எப்படி ஊழியம் செய்கிறார்கள்?