தானியேல் 11:1-45

11  அதோடு அவர், “மேதியனான தரியு ஆட்சி செய்த முதலாம் வருஷத்தில்,+ நான் அவனுக்குத் துணையாக* இருந்து அவனைப் பலப்படுத்தினேன்.  இப்போது நான் உனக்குச் சொல்லப்போகிற விஷயங்கள் நிஜமானவை. பெர்சியாவை ஆட்சி செய்ய இன்னும் மூன்று ராஜாக்கள் வரப்போகிறார்கள். நான்காவதாக வருபவன் மற்ற எல்லாரையும்விட அதிக சொத்துகளைக் குவிப்பான். சொத்துகளால் அவன் வலிமை அடையும்போது, கிரேக்கு தேசத்துக்கு+ எதிராக எல்லாரையும் தூண்டிவிடுவான்.  பின்பு பலம்படைத்த ஒரு ராஜா தோன்றி, இன்னும் பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்வான்.+ அவன் தன்னுடைய இஷ்டப்படியெல்லாம் நடந்துகொள்வான்.  அவன் புகழின் உச்சத்தில் இருக்கும்போது, அவனுடைய சாம்ராஜ்யம் பிளவுபட்டு, பூமியின் நான்கு திசைகளிலும் பிரியும்.+ ஆனாலும், அது அவனுடைய வம்சத்தாருக்குப் போய்ச் சேராது, முன்புபோல் பெரியதாகவும் இருக்காது. அவனுடைய சாம்ராஜ்யம் பறிக்கப்பட்டு மற்றவர்களின் கைக்குப் போய்விடும்.  பின்பு, அவனுடைய படைத் தளபதிகளில் ஒருவனின், அதாவது தென்திசை ராஜாவின், அதிகாரம் கூடும். ஆனால் இன்னொருவன் இந்தத் தென்திசை ராஜாவை வீழ்த்தி, இவனைவிட அதிகாரம் பெற்று, இன்னும் பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்வான்.  சில வருஷங்களுக்குப் பின்பு அவர்கள் கூட்டுச் சேர்வார்கள். தென்திசை ராஜாவின் மகள் வடதிசை ராஜாவிடம் வந்து ஓர் ஒப்பந்தம் செய்வாள். ஆனால், அவளால் தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ராஜாவும் வீழ்ச்சியடைந்து, தன் அதிகாரத்தை இழப்பான். அவளும் அவளைக் கூட்டிக்கொண்டு வருகிறவர்களும் அவளுடைய அப்பாவும் அவளுக்கு அப்போது அதிகாரம் கொடுக்கிறவனும் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.  அவளுடைய குடும்பத்தாரில் ஒருவன், அவனுடைய* ஸ்தானத்துக்கு வருவான். வடதிசை ராஜாவின் கோட்டைக்கும் படைக்கும் எதிராக அவன் வந்து, தாக்குதல் நடத்தி, வெற்றி பெறுவான்.  அவர்களுடைய தெய்வங்களையும், உலோகச் சிலைகளையும், விலைமதிப்புள்ள வெள்ளிச் சாமான்களையும், தங்கச் சாமான்களையும், எகிப்துக்குக் கொண்டுபோவான். ஜனங்களையும் பிடித்துக்கொண்டு போவான். சில வருஷங்களுக்கு வடதிசை ராஜாவிடமிருந்து ஒதுங்கியே இருப்பான்.  ஆனால், வடதிசை ராஜா தென்திசை ராஜாவுடைய ராஜ்யத்துக்கு விரோதமாக வருவான். ஆனாலும், தன்னுடைய சொந்த தேசத்துக்கே திரும்பிப் போய்விடுவான். 10  அவனுடைய* மகன்கள் ஒரு மாபெரும் படையைத் திரட்டி போருக்குத் தயாராவார்கள். அவன்* கண்டிப்பாக வெள்ளம்போல் தேசத்துக்குள் பாய்ந்து வருவான். ஆனால், தன் கோட்டைக்குத் திரும்பிப்போவான். அப்படிப் போகும்போது வழியெல்லாம் போர் செய்துகொண்டே போவான். 11  தென்திசை ராஜா கடும் கோபத்தோடு புறப்பட்டுப் போய் வடதிசை ராஜாவோடு போர் செய்வான். இவன் ஒரு பெரிய கூட்டத்தைத் திரட்டுவான், ஆனால் இவனுடைய கூட்டம் அவனுடைய கையில் கொடுக்கப்படும். 12  அந்தக் கூட்டம் நீக்கப்படும். அவனுடைய இதயம் கர்வமடையும். அவன் ஆயிரக்கணக்கான ஆட்களை வீழ்த்துவான். ஆனால், தன்னுடைய பலத்த அதிகாரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த மாட்டான். 13  வடதிசை ராஜா திரும்பிப்போய், முதலில் திரட்டியதைவிட பெரிய படையைத் திரட்டுவான். காலங்களின் முடிவில், அதாவது சில வருஷங்களுக்குப் பின்பு, ஒரு பெரும் படையுடனும் நிறைய ஆயுதங்களுடனும் நிச்சயம் வருவான். 14  அந்தக் காலங்களில், தென்திசை ராஜாவைப் பலர் எதிர்ப்பார்கள். உன் ஜனங்களுக்குள் இருக்கிற வன்முறையாளர்கள்* ஒரு தரிசனத்தை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள்; ஆனால் தோல்வி அடைவார்கள். 15  வடதிசை ராஜா வந்து, மதில் சூழ்ந்த நகரத்தைச் சுற்றிலும் மண்மேடு அமைத்து, அதைக் கைப்பற்றுவான். தென்திசை ராஜாவின் படைகளாலும் அவனுடைய மாவீரர்களாலும் எதிர்த்து நிற்க முடியாது. போராட அவர்களுக்குப் பலமே இருக்காது. 16  அவனுக்கு* விரோதமாக வருபவன் தன் இஷ்டப்படி செய்வான், ஒருவராலும் அவனுக்கு முன்னால் நிற்க முடியாது. சிங்கார* தேசத்தில்+ அவன் நிற்பான், அடியோடு அழிக்கும் அதிகாரம் அவன் கையில் இருக்கும். 17  தன் ராஜ்யத்தின் படைகள் எல்லாவற்றையும் திரட்டிவரத் தீர்மானமாக இருப்பான். அவன் ஓர் ஒப்பந்தம் செய்வான். நினைத்ததைச் செய்து முடிப்பான். மகளின் வாழ்க்கையை நாசமாக்க அவன் அனுமதிக்கப்படுவான். ஆனால் அவள் அவனுடைய பக்கம் நிற்க மாட்டாள், அவனுக்கு விசுவாசமாக இருக்க மாட்டாள். 18  அவன் கடலோரப் பகுதிகள் பக்கமாகத் திரும்பி, பல பகுதிகளைக் கைப்பற்றுவான். ஒரு படைத் தளபதி அவனுடைய திமிரை ஒரேயடியாக அடக்கிவிடுவான். அந்தத் திமிரினாலேயே அவன் அழிந்துபோகும்படி செய்வான். 19  பின்பு, தன்னுடைய தேசத்தின் கோட்டைகள் பக்கமாகத் திரும்புவான். அங்கு தடுமாறி விழுந்து, இருந்த இடம் தெரியாமல் போவான். 20  அவன் ஸ்தானத்துக்கு இன்னொருவன் வருவான். சீரும் சிறப்பும் பெற்ற ராஜ்யமெங்கும் வசூலிப்பவனை* அவன் அனுப்புவான். யாருடைய கோபத்தினாலோ போரினாலோ சாகாமல் தானாகவே சில நாட்களில் செத்துப்போவான். 21  அவமதிக்கப்பட்ட* ஒருவன் அவன் ஸ்தானத்துக்கு வருவான். அவனுக்கு ராஜ அந்தஸ்து கொடுக்கப்படாது. அமைதியான ஒரு காலகட்டத்தில்* வந்து, அவன் சாதுரியமாக* ராஜ்யத்தைப் பறித்துக்கொள்வான். 22  வெள்ளமாகப் பாய்ந்து வரும் படைகளை அவன் முறியடித்து அழித்துவிடுவான். ஒப்பந்தத்தின்+ தலைவரும்+ கொல்லப்படுவார். 23  அவனோடு அவர்கள் கூட்டணி சேருவதால் அவன் தந்திரமாக நடந்து, ஒரு சிறிய கூட்டத்தின் மூலம் வலிமை அடைவான். 24  அமைதியான ஒரு காலகட்டத்தில்* அவன் மாகாணத்தின் மிகச் செழுமையான பகுதிகளுக்கு வந்து, அவனுடைய முன்னோர்கள் யாருமே செய்யாததைச் செய்வான். கைப்பற்றிய பொருள்களையும் சூறையாடிய பொருள்களையும் சொத்துகளையும் ஜனங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுப்பான். மதில் சூழ்ந்த நகரங்களுக்கு எதிராகச் சதித்திட்டங்கள் தீட்டுவான், ஆனால் இது கொஞ்சக் காலத்துக்குத்தான் நடக்கும். 25  அவன் தன் பலத்தையெல்லாம் ஒன்றுதிரட்டி ஒரு பெரும் படையைக் கொண்டு தென்திசை ராஜாவை முறியடிக்கத் தீர்மானமாக இருப்பான். தென்திசை ராஜாவும் பலம்படைத்த மாபெரும் படையைத் திரட்டி அவனோடு போர் செய்யத் தயாராவான். அவனுக்கு* எதிராகச் சதித்திட்டங்கள் தீட்டப்படும் என்பதால் அவன் முறியடிக்கப்படுவான். 26  அவனுடைய அரண்மனை உப்பைச் சாப்பிடுபவர்களே அவனை வீழ்த்திவிடுவார்கள். அவனுடைய படை சிதறடிக்கப்படும், வீரர்கள் பலர் வெட்டி வீழ்த்தப்படுவார்கள். 27  இந்த இரண்டு ராஜாக்களும் தீமை செய்ய நினைப்பார்கள். ஒரே மேஜையில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பொய் பேசுவார்கள். ஆனால் அவர்களுடைய திட்டங்கள் எதுவும் வெற்றி பெறாது, ஏனென்றால் கடவுள் குறித்திருக்கிற காலத்தில்தான் முடிவு வரும்.+ 28  அவன்* ஏராளமான பொருள்களோடு தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான். அவனுடைய இதயம் பரிசுத்த ஒப்பந்தத்துக்கு எதிராக இருக்கும். தான் நினைத்ததைச் செய்துவிட்டு, தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான். 29  குறிக்கப்பட்ட காலத்தில் அவன் தென்திசைக்கு விரோதமாகத் திரும்பி வருவான். ஆனால், முன்பு நடந்ததுபோல் இந்தத் தடவை நடக்காது. 30  ஏனென்றால், கித்தீமின்+ கப்பல்கள் அவனுக்கு எதிராக வந்து, அவனைத் தாழ்த்தும். அவன் திரும்பிப்போய் பரிசுத்த ஒப்பந்தத்துக்கு எதிராகக் கடும் கோபத்தைக் காட்டி,* நினைத்ததைச் செய்து முடிப்பான்.+ அவன் திரும்பிப்போய் பரிசுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுகிறவர்கள்மேல் கவனத்தைத் திருப்புவான். 31  படைகள் அவனிடமிருந்து புறப்பட்டு வந்து, பரிசுத்த இடத்தையும் கோட்டையையும் தீட்டுப்படுத்தி,+ வழக்கமான* பலியை+ நீக்கிவிடும். அதோடு, பாழாக்கும் அருவருப்பை அவை ஏற்படுத்தும்.+ 32  ஒப்பந்தத்துக்கு எதிராக நடந்துகொள்கிறவர்களிடம் அவன் இனிமையாக* பேசி, கடவுளைவிட்டு விலக* அவர்களைத் தூண்டுவான். ஆனால், கடவுளைத் தெரிந்திருக்கிற ஜனங்கள் உறுதியோடு இருந்து, வெற்றி பெறுவார்கள். 33  ஜனங்களில் விவேகமுள்ளவர்கள்,*+ விஷயங்களை நிறைய பேருக்குப் புரிய வைப்பார்கள். ஆனால் அவர்கள் சில நாட்களுக்கு வாளினாலும், நெருப்பினாலும், சிறைவாசத்தினாலும், கொள்ளையினாலும் விழ வைக்கப்படுவார்கள். 34  அவர்கள் விழ வைக்கப்படும்போது அவர்களுக்கு ஓரளவு உதவி கிடைக்கும். பலர் இனிமையாக* பேசி அவர்களோடு சேர்ந்துகொள்வார்கள். 35  விவேகமுள்ளவர்களில்* சிலர் முடிவு காலம்வரை புடமிடப்பட்டு, சுத்தமாக்கப்பட்டு, தூய்மையாக்கப்படுவதற்காக அப்படி விழ வைக்கப்படுவார்கள்.+ ஏனென்றால், அது குறிக்கப்பட்ட காலத்தில்தான் நடக்கும். 36  ராஜா தன் இஷ்டப்படி நடந்துகொள்வான், தன்னைத்தானே மேன்மைப்படுத்திக்கொள்வான், எல்லா தெய்வங்களுக்கும் மேலாகத் தன்னை உயர்த்துவான். தேவாதி தேவனுக்கு+ எதிராகப் பயங்கரமான விஷயங்களைப் பேசுவான். கண்டனத்தீர்ப்பு நிறைவேறும்வரை அவன் நினைத்தது கைகூடும். ஏனென்றால், தீர்மானிக்கப்பட்டது நிறைவேற வேண்டும். 37  அவன் தன்னுடைய முன்னோர்களின் கடவுளுக்கு மதிப்புக் காட்ட மாட்டான். பெண்களின் விருப்பத்தையோ வேறெந்த தெய்வத்தையோ மதிக்காமல், எல்லாருக்கும் மேலாகத் தன்னையே உயர்த்திக்கொள்வான். 38  ஆனால்* கோட்டைகளின் தெய்வத்தை மகிமைப்படுத்துவான். தன்னுடைய முன்னோர்கள் வணங்காத ஒரு தெய்வத்தை தங்கத்தாலும், வெள்ளியாலும், விலைமதிப்புள்ள கற்களாலும், மதிப்புள்ள பொருள்களாலும் மகிமைப்படுத்துவான். 39  பொய் தெய்வத்தின் துணையோடு பலத்த கோட்டைகளுக்கு எதிராகத் திறமையாய்ச் செயல்படுவான். தன்னை மதிக்கிறவர்களை* மிகவும் கௌரவிப்பான், நிறைய பேரை ஆளும் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுப்பான். நிலத்தை விலைக்குப் பங்குபோட்டுத் தருவான். 40  முடிவு காலத்தில் தென்திசை ராஜா வடதிசை ராஜாவோடு சண்டைக்கு நிற்பான். வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவைத் தாக்குவதற்கு ரதங்களோடும் குதிரைவீரர்களோடும் பல கப்பல்களோடும் வேகமாக வருவான்; தேசங்களுக்குள் வெள்ளம்போல் பாய்ந்து எல்லாவற்றையும் நாசமாக்குவான். 41  அவன் சிங்கார* தேசத்துக்குள்ளும் நுழைவான்.+ பல தேசங்கள் வீழ்ச்சியடையும். ஆனால், ஏதோமும் மோவாபும் அம்மோனியர்களின் முக்கியப் பகுதியும் அவனுடைய கையிலிருந்து தப்பும். 42  தொடர்ந்து அவன் தேசங்களைத் தாக்கிக்கொண்டே இருப்பான். எகிப்து தேசமும் அவன் கைக்குத் தப்பாது. 43  எகிப்தின் புதையல்களான தங்கத்தையும் வெள்ளியையும் அருமையான பொருள்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவான். லீபியா தேசத்தாரும் எத்தியோப்பியர்களும் அவன் காலடியில் கிடப்பார்கள்.* 44  ஆனால், கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் வருகிற அறிக்கைகளைக் கேட்டு அவன் கலக்கமடைவான். பலரை அழிக்கவும் ஒழித்துக்கட்டவும் மிகுந்த ஆவேசத்தோடு புறப்பட்டுப் போவான். 45  பெருங்கடலுக்கும் சிங்காரமான* பரிசுத்த மலைக்கும் இடையில் தன்னுடைய ராஜ கூடாரங்களைப் போடுவான்.+ உதவிக்கு யாருமே இல்லாமல் தன் முடிவைச் சந்திப்பான்” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கோட்டையாக.”
அநேகமாக, “தென்திசை ராஜாவுடைய.”
அநேகமாக, “வடதிசை ராஜாவுடைய.”
அதாவது, “அவர்களில் ஒருவன்.”
வே.வா., “திருடர்களின் மகன்கள்.”
வே.வா., “அழகான.”
அநேகமாக, “தென்திசை ராஜாவுக்கு.”
ஒருவேளை, வரிவசூலிப்பவனைக் குறிக்கலாம். வே.வா., “வேலை வாங்குபவனை.”
வே.வா., “கேடுகெட்ட.”
அல்லது, “முன்னெச்சரிக்கை தராமல்.”
வே.வா., “தந்திரமாக.”
அல்லது, “முன்னெச்சரிக்கை தராமல்.”
அநேகமாக, “வடதிசை ராஜாவுக்கு.”
அநேகமாக, “வடதிசை ராஜா.”
வே.வா., “பரிசுத்த ஒப்பந்தத்தைக் கண்டனம் செய்து.”
வே.வா., “தினமும் செலுத்தப்படுகிற.”
வே.வா., “போலியாக.”
வே.வா., “விசுவாசதுரோகம் செய்ய.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள்.”
வே.வா., “போலியாக.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதல் உள்ளவர்களில்.”
வே.வா., “தன் ஸ்தானத்தில்.”
அல்லது, “தான் மதிப்பவர்களை.”
வே.வா., “அழகான.”
வே.வா., “அவனைப் பின்பற்றுவார்கள்.”
வே.வா., “அழகான.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா