பிரசங்கி 4:1-16
4 சூரியனுக்குக் கீழே நடக்கிற எல்லா கொடுமைகளையும் நான் மறுபடியும் கவனித்தேன். அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைப் பார்த்தேன்; அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.+ அவர்களை அடக்கி ஒடுக்கியவர்களுக்கு அதிகாரம் இருந்ததால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.
2 உயிரோடு வாழ்ந்துவந்தவர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாக ஏற்கெனவே செத்துப்போயிருந்தவர்களைப் பாராட்டினேன்.+
3 இவர்கள் எல்லாரையும்விட இன்னும் பிறக்காதவர்களுடைய நிலைமை எவ்வளவோ மேல்.+ ஏனென்றால், சூரியனுக்குக் கீழே நடக்கிற கொடுமைகளை அவர்கள் பார்க்கவில்லை.+
4 போட்டி பொறாமையென்று வந்துவிட்டால்+ மனுஷர்கள் எந்தளவுக்கு முயற்சி எடுத்து* திறமையாக வேலை செய்கிறார்கள் என்று பார்த்திருக்கிறேன். இதுவும் வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.
5 முட்டாள் தன் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்து, தனக்கே அழிவைத் தேடிக்கொள்கிறான்.+
6 ரொம்பவும் கஷ்டப்பட்டு* வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம்* ஓய்வெடுப்பது மேல்.+
7 சூரியனுக்குக் கீழே நடக்கிற இன்னொரு வீணான காரியத்தையும் கவனித்தேன்:
8 ஒருவன் தன்னந்தனியாக இருக்கிறான், அவனுக்கு நண்பனும் இல்லை, மகனும் இல்லை, சகோதரனும் இல்லை. ஆனாலும், ராத்திரி பகலாக உழைக்கிறான். எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் அவனுடைய கண்கள் திருப்தி அடைவதில்லை.+ ‘நல்லது எதையும் அனுபவிக்காமல் யாருக்காக இப்படி ஓடி ஓடி உழைக்கிறேன்?’+ என்று அவன் எப்போதாவது யோசிக்கிறானா? இதுவும் வீண்தான், வேதனையான வேலைதான்.+
9 தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது.+ அப்போது, அவர்களுடைய கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.
10 ஒருவன் விழுந்தால் இன்னொருவன் தூக்கிவிட முடியும். ஆனால், தனியாக இருப்பவன் கீழே விழுந்தால் அவனை யார் தூக்கிவிடுவது?
11 இரண்டு பேர் சேர்ந்து படுத்துக்கொண்டால் கதகதப்பாக இருக்கும். தனியாக இருப்பவனால் எப்படிக் கதகதப்பாக இருக்க முடியும்?
12 தனியாக இருப்பவனை ஒருவன் சுலபமாக வீழ்த்திவிடலாம். ஆனால், இரண்டு பேராக இருந்தால் அவனை எதிர்த்து நிற்க முடியும். மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றைச் சீக்கிரத்தில் அறுக்க முடியாது.
13 வயதானவராக இருந்தாலும் எச்சரிக்கையைக் கேட்டு நடக்கிற அளவுக்குக்கூட புத்தி இல்லாத முட்டாள் ராஜாவைவிட,+ ஏழையாக இருந்தாலும் ஞானமாக நடக்கிற இளைஞனே மேல்.+
14 ஏனென்றால், அந்த ராஜாவின் ஆட்சியில் அவன்* ஏழையாகப் பிறந்திருந்தாலும்,+ சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்து ராஜாவாக ஆனான்.+
15 சூரியனுக்குக் கீழே நடமாடுகிற எல்லாரையும் பற்றி யோசித்துப் பார்த்தேன். ராஜாவுக்கு அடுத்தபடியாகச் சிம்மாசனத்தில் உட்காரும் வாரிசைப் பற்றியும் யோசித்துப் பார்த்தேன்.
16 அவனுக்கு ஏகப்பட்ட ஆதரவாளர்கள் இருந்தாலும், பிற்பாடு வருகிறவர்களுக்கு அவனைப் பிடிக்காது.+ இதுவும் வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “கடினமாக உழைத்து.”
^ நே.மொ., “ஒரு கைப்பிடி அளவு.”
^ நே.மொ., “இரண்டு கைப்பிடி அளவு.”
^ ஒருவேளை, அந்த ஞானமான இளைஞனைக் குறிக்கலாம்.