லூக்கா எழுதியது 22:1-71
22 பஸ்கா+ என்ற புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை நெருங்கிவந்தது.+
2 முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் மக்களுக்குப் பயந்ததால்,+ சாமர்த்தியமான விதத்தில் இயேசுவை ஒழித்துக்கட்டுவதற்கு வழி தேடிக்கொண்டிருந்தார்கள்.+
3 பின்பு, பன்னிரண்டு பேரில்* ஒருவனான இஸ்காரியோத்து என்ற யூதாசின் இதயத்துக்குள் சாத்தான் புகுந்தான்.+
4 அவன் முதன்மை குருமார்களிடமும் ஆலயத்தின் காவல் தலைவர்களிடமும் போய் அவரைக் காட்டிக்கொடுப்பது பற்றிக் கலந்துபேசினான்.+
5 அவர்கள் மனம் குளிர்ந்துபோய், அவனுக்கு வெள்ளிக் காசுகள்+ தருவதாக ஒத்துக்கொண்டார்கள்.
6 அவனும் அதற்குச் சம்மதித்து, கூட்டம் இல்லாத சமயத்தில் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சரியான சந்தர்ப்பத்தைத் தேட ஆரம்பித்தான்.
7 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை நாள் வந்தது; அதாவது, பஸ்கா பலியைக் கொடுக்க வேண்டிய நாள் வந்தது.+
8 அதனால் அவர் பேதுருவிடமும் யோவானிடமும், “நாம் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கு நீங்கள் போய் ஏற்பாடு செய்யுங்கள்”+ என்று சொல்லி அனுப்பினார்.
9 அப்போது அவர்கள், “நாங்கள் அதை எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
10 அதற்கு அவர், “நீங்கள் நகரத்துக்குள் போகும்போது, மண்ஜாடியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருகிற ஒருவன் உங்களைச் சந்திப்பான். அவன் பின்னால் போய் அவன் நுழையும் வீட்டுக்குள் நுழையுங்கள்.+
11 அந்த வீட்டுச் சொந்தக்காரரிடம், ‘“என் சீஷர்களோடு நான் பஸ்கா உணவு சாப்பிடுவதற்கான விருந்தினர் அறை எங்கே?” என்று போதகர் கேட்கிறார்’ எனச் சொல்லுங்கள்.
12 அப்போது, மாடியில் தேவையான வசதிகள் செய்யப்பட்ட ஒரு பெரிய அறையை அவர் உங்களுக்குக் காட்டுவார். அங்கே பஸ்காவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொன்னார்.
13 சீஷர்களும் போய், அவர் சொன்னதெல்லாம் அப்படியே நடந்ததைப் பார்த்து, பஸ்காவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.
14 நேரம் வந்தபோது, அவர் அப்போஸ்தலர்களோடு சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தார்.+
15 அப்போது அவர், “நான் பாடுகள் படுவதற்கு முன்பு உங்களோடு சேர்ந்து இந்த பஸ்கா உணவைச் சாப்பிட மிகவும் ஆசையாக இருந்தேன்.
16 ஏனென்றால், கடவுளுடைய அரசாங்கத்தில் இது நிறைவேறும்வரை இனி இதைச் சாப்பிட மாட்டேன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
17 பின்பு, கிண்ணத்தை வாங்கி கடவுளுக்கு நன்றி சொல்லி, “ஒவ்வொருவராக இதை வாங்கிக் குடியுங்கள்.
18 நான் உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கம் வரும்வரை இனி திராட்சமதுவைக் குடிக்க மாட்டேன்” என்று சொன்னார்.
19 பின்பு ரொட்டியை+ எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அதைப் பிட்டு அவர்களிடம் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும்+ என் உடலைக் குறிக்கிறது.+ என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்”+ என்று சொன்னார்.
20 உணவு சாப்பிட்ட பின்பு, அதேபோல் கிண்ணத்தையும் கொடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற+ என் இரத்தத்தின் அடிப்படையிலான+ புதிய ஒப்பந்தத்தைக்+ குறிக்கிறது.
21 இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் என்னோடு சாப்பிட உட்கார்ந்திருக்கிறான்.+
22 முன்பே தீர்மானிக்கப்பட்டபடி,+ மனிதகுமாரன் உங்களைவிட்டுப் போகிறார்; ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு வந்தே தீரும்!”+ என்று சொன்னார்.
23 அப்போது, தங்களில் யார் அப்படிச் செய்வார் என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.+
24 பின்பு, தங்களில் யார் மிக உயர்ந்தவர் என்பதைப் பற்றி அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.+
25 அதனால் அவர் அவர்களிடம், “மற்ற தேசத்து ராஜாக்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள், மக்கள்மேல் அதிகாரம் உள்ளவர்கள் ‘மக்கள் தொண்டர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.+
26 நீங்களோ அப்படி இருக்கக் கூடாது.+ உங்களில் மிக உயர்ந்தவராக இருப்பவர் எல்லாருக்கும் சிறியவரைப் போல் இருக்க வேண்டும்,+ உங்களை வழிநடத்துகிறவர் பணிவிடைக்காரரைப் போல் இருக்க வேண்டும்.
27 யார் உயர்ந்தவர்? சாப்பிட உட்கார்ந்திருப்பவரா அல்லது பணிவிடை செய்பவரா? சாப்பிட உட்கார்ந்திருப்பவர்தானே? அப்படியிருந்தும், நான் உங்கள் மத்தியில் பணிவிடை செய்பவனாக இருக்கிறேன்.+
28 ஆனாலும், எனக்குச் சோதனைகள்+ வந்தபோது என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்கள்தான்.+
29 அதனால், ஒரு அரசாங்கத்துக்காக+ என் தகப்பன் என்னோடு ஒப்பந்தம் செய்திருப்பதுபோல் நானும் உங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன்.
30 என்னுடைய அரசாங்கத்தில் நீங்கள் என்னோடு உட்கார்ந்து உணவும் பானமும் சாப்பிடுவீர்கள்.+ இஸ்ரவேலின் 12 கோத்திரங்களையும் நியாயந்தீர்க்க+ சிம்மாசனங்களில் உட்காருவீர்கள்.+
31 சீமோனே, சீமோனே, இதோ! கோதுமையைப் புடைத்தெடுப்பதுபோல் உங்கள் எல்லாரையும் புடைத்தெடுக்க வேண்டும் என்று சாத்தான் கேட்டிருக்கிறான்.+
32 ஆனால், நீ விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்க வேண்டுமென்று உனக்காக மன்றாடியிருக்கிறேன்.+ நீ மனம் திருந்தியதும் உன் சகோதரர்களைப் பலப்படுத்து”+ என்று சொன்னார்.
33 அப்போது பேதுரு, “எஜமானே, உங்களோடு சிறைக்குப் போவதற்கும் சாவதற்கும் நான் தயாராக இருக்கிறேன்”+ என்று சொன்னார்.
34 ஆனால் அவர், “பேதுரு, நான் உனக்குச் சொல்கிறேன், இன்று சேவல் கூவுவதற்கு முன்பு, என்னைத் தெரியாதென்று நீ மூன்று தடவை சொல்லிவிடுவாய்”+ என்றார்.
35 பின்பு அவர் சீஷர்களிடம், “பணப் பையும் உணவுப் பையும் செருப்புகளும் இல்லாமல் நான் உங்களை அனுப்பியபோது,+ உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?” என்று கேட்டார். அவர்கள், “இல்லை!” என்று சொன்னார்கள்.
36 அதற்கு அவர், “இப்போதோ, பணப் பையை வைத்திருப்பவன் அதைக் கொண்டுபோகட்டும், அதுபோல உணவுப் பையையும் கொண்டுபோகட்டும். வாள் இல்லாதவன் தன்னுடைய மேலங்கியை விற்று ஒரு வாளை வாங்கிக்கொள்ளட்டும்.
37 ‘அக்கிரமக்காரர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார்’+ என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனம் என்னில் நிறைவேற வேண்டும் என்பதற்காக இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். என்னைப் பற்றி எழுதப்பட்டதெல்லாம் நிறைவேறி வருகிறது”+ என்று சொன்னார்.
38 அப்போது அவர்கள், “எஜமானே, இதோ! இங்கே இரண்டு வாள்கள் இருக்கின்றன” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “இது போதும்” என்று சொன்னார்.
39 பின்பு அங்கிருந்து புறப்பட்டு, தன்னுடைய வழக்கத்தின்படியே ஒலிவ மலைக்குப் போனார். அவருடைய சீஷர்களும் அவருக்குப் பின்னால் போனார்கள்.+
40 அந்த இடத்துக்கு வந்ததுமே அவர்களிடம், “சோதனைக்கு இணங்கிவிடாதபடி தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்”+ என்று அவர் சொன்னார்.
41 பின்பு, அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் போய் மண்டிபோட்டு,
42 “தகப்பனே, உங்களுக்கு விருப்பமானால் இந்தக் கிண்ணத்தை* என்னிடமிருந்து எடுத்துவிடுங்கள். ஆனால் என்னுடைய விருப்பத்தின்படி* அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே* நடக்கட்டும்”+ என்று சொன்னார்.
43 அப்போது, பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதர் அவருக்குத் தோன்றி அவரைப் பலப்படுத்தினார்.+
44 ஆனால், அவர் ரொம்பவே வேதனையில் இருந்ததால் இன்னும் அதிக உருக்கமாக ஜெபம் செய்துகொண்டிருந்தார்.+ அவருடைய வியர்வைத் துளிகள் இரத்தத் துளிகள்போல் தரையில் விழுந்தன.
45 ஜெபம் செய்த பின்பு அவர் எழுந்து சீஷர்களிடம் போனார். அங்கே அவர்கள் துக்கத்தில் துவண்டுபோய்த் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து,+
46 “ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள்? எழுந்திருங்கள், சோதனைக்கு இணங்கிவிடாதபடி தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்று சொன்னார்.+
47 அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, ஆட்கள் கூட்டமாக வந்தார்கள். பன்னிரண்டு பேரில் ஒருவனாகிய யூதாஸ் அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தான்; அவன் இயேசுவுக்கு முத்தம் கொடுக்க அவர் பக்கத்தில் வந்தான்.+
48 ஆனால் இயேசு அவனிடம், “யூதாஸ், மனிதகுமாரனை முத்தம் கொடுத்தா காட்டிக்கொடுக்கிறாய்?” என்று கேட்டார்.
49 அவரோடு நின்றுகொண்டிருந்தவர்கள் நடக்கப்போவதை உணர்ந்து, “எஜமானே, நாங்கள் வாளால் வெட்டலாமா?” என்று கேட்டார்கள்.
50 அவர்களில் ஒருவர் தலைமைக் குருவின் வேலைக்காரனைத் தாக்கினார், அவனுடைய வலது காது அறுந்துபோனது.+
51 அப்போது இயேசு, “இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். பின்பு, அந்த வேலைக்காரனுடைய காதைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார்.
52 அதன் பின்பு, இயேசு தன்னைப் பிடிக்க வந்திருந்த முதன்மை குருமார்களையும் ஆலயத்தின் காவல் தலைவர்களையும் பெரியோர்களையும்* பார்த்து, “ஒரு கொள்ளைக்காரனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைப் பிடிக்க வந்திருக்கிறீர்களா?+
53 நான் தினமும் ஆலயத்தில் உங்களோடு இருந்தபோதெல்லாம்+ நீங்கள் என்மேல் கை வைக்கவில்லை.+ ஆனால், இது உங்களுடைய நேரம், இருள் அதிகாரம் செலுத்துகிற நேரம்”+ என்று சொன்னார்.
54 அவர்கள் அவரைக் கைது செய்து, தலைமைக் குருவின் வீட்டுக்குள் கொண்டுபோனார்கள்.+ ஆனால், பேதுரு தூரத்திலிருந்தபடி அவர்களைப் பின்தொடர்ந்து போனார்.+
55 முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்திருந்தவர்களோடு அவரும் உட்கார்ந்துகொண்டார்.+
56 எரிந்துகொண்டிருந்த நெருப்புக்குப் பக்கத்தில் அவர் உட்கார்ந்திருந்ததை ஒரு வேலைக்காரப் பெண் கண்டு, அவரை உற்றுப் பார்த்து, “இந்த ஆளும் அவரோடு இருந்தான்” என்று சொன்னாள்.
57 ஆனால் பேதுரு, “இல்லை, எனக்கு அவரைத் தெரியாது” என்று சொல்லி மறுத்தார்.
58 சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அவரைப் பார்த்து, “நீயும் அவர்களில் ஒருவன்தான்” என்று சொன்னான். ஆனால் பேதுரு, “இல்லவே இல்லை”+ என்று சொன்னார்.
59 சுமார் ஒரு மணிநேரம் கழித்து வேறொரு ஆள், “நிச்சயமாகவே இந்த மனுஷனும் அவரோடு இருந்தான், இவன் ஒரு கலிலேயன்தான்!” என்று அடித்துச் சொல்ல ஆரம்பித்தான்.
60 ஆனால் பேதுரு, “நீ என்ன சொல்கிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை” என்றார். இப்படி அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, உடனடியாக ஒரு சேவல் கூவியது.
61 அப்போது இயேசு திரும்பி, பேதுருவை நேராகப் பார்த்தார். “இன்று சேவல் கூவுவதற்கு முன்பு, என்னைத் தெரியாதென்று நீ மூன்று தடவை சொல்லிவிடுவாய்” என்று இயேசு தன்னிடம் சொன்னது பேதுருவின் ஞாபகத்துக்கு வந்தது.+
62 அதனால், அவர் வெளியே போய்க் கதறி அழுதார்.
63 இயேசுவைக் காவல் காத்த ஆட்கள் அவரைக் கேலி செய்யவும்+ அடிக்கவும்+ ஆரம்பித்தார்கள்.
64 அவருடைய முகத்தை மூடி, “நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் உன்னை அடித்தது யார் என்று சொல் பார்க்கலாம்” என்றார்கள்.
65 அவருக்கு எதிராக இன்னும் பலவற்றைச் சொல்லி நிந்தித்தார்கள்.
66 பொழுது விடிந்தபோது, முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் அடங்கிய பெரியோர் குழுவினர் ஒன்றுகூடி,+ நியாயசங்க மன்றத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.
67 அவரிடம், “நீ கிறிஸ்துவா? எங்களுக்குச் சொல்”+ என்றார்கள். அதற்கு அவர், “நான் அதை உங்களுக்குச் சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை.
68 உங்களிடம் நான் கேள்வி கேட்டாலும் நீங்கள் பதில் சொல்லப்போவதில்லை.
69 ஆனால், இப்போதுமுதல் மனிதகுமாரன்+ வல்லமையுள்ள கடவுளின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பார்”+ என்று சொன்னார்.
70 அதற்கு அவர்கள் எல்லாரும், “அப்படியானால், நீ கடவுளுடைய மகனா?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் அவர்தான் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்” என்றார்.
71 அப்போது அவர்கள், “இனி நமக்கு வேறு சாட்சி எதற்கு? இவனுடைய வாயிலிருந்து நாமே கேட்டுவிட்டோம்”+ என்று சொன்னார்கள்.
அடிக்குறிப்புகள்
^ அதாவது, “அப்போஸ்தலர்களில்.”
^ “கிண்ணம்” என்பது கடவுளுடைய சித்தத்தை, அதாவது இயேசு தெய்வ நிந்தனை செய்தார் என்று பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கொல்லப்படுவதற்குக் கடவுள் அவரை அனுமதித்ததை அடையாளப்படுத்துகிறது.
^ வே.வா., “சித்தத்தின்படி.”
^ வே.வா., “சித்தத்தின்படியே.”
^ வே.வா., “மூப்பர்களையும்.”