லூக்கா எழுதியது 4:1-44

4  கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்ட இயேசு யோர்தானைவிட்டுத் திரும்பினார்; அவர் 40 நாட்கள் வனாந்தரத்தில் இருந்தபோது கடவுளுடைய சக்தி அவரை வழிநடத்தியது.+  அந்த 40 நாட்களும் அவர் ஒன்றுமே சாப்பிடாததால் அதன்பின் அவருக்குப் பசியெடுத்தது. அப்போது பிசாசு அவரைச் சோதித்தான்.+  அவன் அவரிடம், “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கல்லை ரொட்டியாகும்படி சொல்” என்றான்.  அதற்கு இயேசு, “‘மனுஷன் உணவால்* மட்டுமே உயிர்வாழக் கூடாது’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.  அதனால், பிசாசு அவரை உயரமான இடத்துக்குக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் ஒரே நொடியில் அவருக்குக் காட்டி,+  “இவை எல்லாவற்றின் மீதுள்ள அதிகாரத்தையும் இவற்றின் மகிமையையும் நான் உனக்குத் தருவேன்; ஏனென்றால், இந்த அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது;+ எனக்கு இஷ்டமானவனுக்கு இதைக் கொடுப்பேன்.  நீ ஒரேவொரு தடவை என்னை வணங்கினால் இதெல்லாம் உனக்குச் சொந்தமாகும்” என்று சொன்னான்.  அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை* மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.  பின்பு, அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், ஆலயத்தின் உயரமான இடத்தில்* அவரை நிற்க வைத்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இங்கிருந்து கீழே குதி.+ 10  ஏனென்றால், ‘உன்னைப் பாதுகாக்கச் சொல்லி அவர் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார்.’ 11  ‘உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறது”+ என்று சொன்னான். 12  அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை* சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனச் சொல்லப்பட்டிருக்கிறதே”+ என்றார். 13  பிசாசு எல்லா சோதனைகளையும் முடித்த பின்பு, வேறொரு நல்ல சந்தர்ப்பம் வரும்வரை அவரைவிட்டு விலகிப்போனான்.+ 14  அதன் பின்பு, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கலிலேயாவுக்கு இயேசு திரும்பி வந்தார்.+ அந்தச் சுற்றுவட்டாரம் முழுவதும் அவருடைய புகழ் பரவியது. 15  அவர்களுடைய ஜெபக்கூடங்களில் அவர் கற்பிக்க ஆரம்பித்தார்; எல்லாரும் அவரை உயர்வாக மதித்தார்கள். 16  பின்பு, தான் வளர்ந்த ஊரான நாசரேத்துக்கு அவர் வந்தார்;+ தன்னுடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபக்கூடத்துக்குப்+ போய், வாசிப்பதற்காக எழுந்து நின்றார். 17  ஏசாயா தீர்க்கதரிசியின் சுருள் அவரிடம் கொடுக்கப்பட்டது; அந்தச் சுருளை அவர் விரித்து, 18  “யெகோவாவின்* சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நல்ல செய்தியைச் சொல்ல அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்.* கைப்பற்றப்பட்டவர்களுக்கு விடுதலையும் பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையும் கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காகவும்,+ 19  யெகோவாவின்* அனுக்கிரகக் காலத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காகவும் அவர் என்னை அனுப்பினார்”+ என்று எழுதப்பட்டிருந்த பகுதியை எடுத்து வாசித்தார். 20  அதன் பின்பு, அந்தச் சுருளைச் சுருட்டி ஜெபக்கூடப் பணியாளனிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தார்; அங்கிருந்த எல்லாருடைய கண்களும் அவர்மேல்தான் இருந்தன. 21  பின்பு அவர் பேச ஆரம்பித்து, “இப்போது நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறிவிட்டது”+ என்று சொன்னார். 22  அங்கிருந்த எல்லாரும் அவர் பேசிய கனிவான வார்த்தைகளைக்+ கேட்டு ஆச்சரியத்துடன், “இவன் யோசேப்பின் மகன்களில் ஒருவன்தானே?”+ என்று சொல்லி, அவரைப் புகழ்ந்துபேச ஆரம்பித்தார்கள். 23  அப்போது அவர், “‘மருத்துவனே, நீயே உன்னைக் குணமாக்கிக்கொள்’ என்ற பழமொழியை நீங்கள் எனக்குப் பொருத்தி, ‘கப்பர்நகூமில்+ நீ செய்த காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். அவற்றை இங்கே உன்னுடைய சொந்த ஊரிலும் செய்’ என்று சொல்வீர்கள். 24  ஆனாலும், உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், எந்தத் தீர்க்கதரிசியும் தன் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.+ 25  நிஜமாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எலியாவின் நாட்களில் இஸ்ரவேலில் நிறைய விதவைகள் இருந்தார்கள்; அப்போது, மூன்றரை வருஷங்களுக்கு மழை பெய்யாததால் தேசம் முழுவதும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.+ 26  ஆனாலும், சீதோனில் உள்ள சாறிபாத் நகரத்திலிருந்த விதவையிடம் மட்டுமே எலியா அனுப்பப்பட்டார்,+ வேறெந்த விதவையிடமும் அல்ல. 27  அதோடு, தீர்க்கதரிசியான எலிசாவின் காலத்தில் இஸ்ரவேலில் நிறைய தொழுநோயாளிகள் இருந்தார்கள்; ஆனால், சீரியாவைச் சேர்ந்த நாகமானைத் தவிர அவர்களில் வேறொருவரும் சுத்தமாக்கப்படவில்லை”+ என்று சொன்னார். 28  ஜெபக்கூடத்தில் இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் கோபத்தில் கொதித்தெழுந்தார்கள்.+ 29  அவரை வேகவேகமாக நகரத்துக்கு வெளியே கொண்டுபோனார்கள்; அந்த நகரம் அமைந்திருந்த மலையின் விளிம்பிலிருந்து தலைகுப்புறத் தள்ளிவிடுவதற்காக அவரை அங்கே கொண்டுபோனார்கள். 30  ஆனால், இயேசு அவர்கள் நடுவே புகுந்து அங்கிருந்து போய்விட்டார்.+ 31  பின்பு அவர் கலிலேயாவில் இருக்கிற கப்பர்நகூம் என்ற நகரத்துக்குப் போய், ஓய்வுநாளில் மக்களுக்குக் கற்பித்தார்.+ 32  அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்;+ ஏனென்றால், அவர் அதிகாரத்தோடு பேசினார். 33  அப்போது, பேய் பிடித்த ஒருவன் அந்த ஜெபக்கூடத்தில் இருந்தான். அவன் உரத்த குரலில்,+ 34  “ஐயோ! நாசரேத்தூர் இயேசுவே,+ உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? எங்களை ஒழித்துக்கட்டவா வந்தீர்கள்? நீங்கள் யாரென்று எனக்கு நன்றாகத் தெரியும், நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர்”+ என்று கத்தினான். 35  ஆனால் இயேசு, “பேசாதே, இவனைவிட்டு வெளியே போ!” என்று அதட்டினார். அப்போது, அந்தப் பேய் அவர்கள் முன்னால் அவனைக் கீழே தள்ளியது; அவனைக் காயப்படுத்தாமல் அவனைவிட்டு வெளியே போனது. 36  அங்கிருந்த எல்லாரும் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் பேய்களுக்குக் கட்டளையிடுகிறார், அவையும் வெளியே போகின்றனவே!” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். 37  அவரைப் பற்றிய செய்தி அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருந்த எல்லா பகுதிகளுக்கும் பரவியது. 38  பின்பு, அவர் ஜெபக்கூடத்திலிருந்து புறப்பட்டு சீமோனுடைய வீட்டுக்குப் போனார். அங்கே சீமோனின் மாமியார் கடுமையான காய்ச்சலில் படுத்துக்கிடந்தாள். அவளுக்கு உதவி செய்யச் சொல்லி அவரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.+ 39  அப்போது அவர் அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்று, காய்ச்சல் போகும்படி கட்டளையிட்டார். உடனடியாகக் காய்ச்சல் போய்விட்டது; அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். 40  சூரியன் மறையும் நேரத்தில், தங்களுடைய வீட்டில் பலவிதமான நோய்களால் அவதிப்பட்டவர்களை மக்கள் எல்லாரும் அவரிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; அவர்கள் ஒவ்வொருவர்மேலும் கைகளை வைத்து அவர் குணப்படுத்தினார்.+ 41  பேய்களும், “நீங்கள் கடவுளுடைய மகன்”+ என்று கத்தியபடி நிறைய பேரைவிட்டு வெளியேறின. ஆனால், அவர்தான் கிறிஸ்து என்று அந்தப் பேய்களுக்குத் தெரிந்திருந்ததால்,+ அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.+ 42  பொழுது விடிந்தபோது, அவர் எழுந்து தனிமையான ஓர் இடத்துக்குப் போனார்.+ ஆனால், மக்கள் அவரைத் தேடிக்கொண்டு அவர் இருந்த இடத்துக்கே வந்து, தங்களைவிட்டுப் போகாதபடி அவரைத் தடுக்கப் பார்த்தார்கள். 43  ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்”+ என்று சொன்னார். 44  அதன்படியே, யூதேயாவிலிருந்த ஜெபக்கூடங்களில் அவர் பிரசங்கித்துவந்தார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “ரொட்டியால்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “ஆலயத்தின் கொத்தளத்தில்; ஆலயத்தின் மதில்மேல்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “அபிஷேகம் செய்தார்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

வனாந்தரம்
வனாந்தரம்

பைபிளில் “வனாந்தரம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் (எபிரெயுவில், மித்பார்; கிரேக்கில், ஈரெமாஸ்), பொதுவாக மனிதர்கள் அதிகம் குடியிருக்காத தரிசு நிலப்பகுதிகளைக் குறிக்கின்றன. புற்களும் புதர்களும் கொண்ட புல்வெளிகளையும், மேய்ச்சல் நிலங்களையும்கூட அவை பெரும்பாலும் குறிக்கின்றன. அந்த வார்த்தைகள், தண்ணீரே இல்லாத பாலைவனங்களைக்கூடக் குறிக்கலாம். சுவிசேஷப் புத்தகங்களில் சொல்லப்படும் வனாந்தரம், பொதுவாக யூதேயாவின் வனாந்தரத்தைக் குறிக்கிறது. இந்த வனாந்தரத்தில்தான் யோவான் வாழ்ந்தார், ஊழியமும் செய்தார். இங்குதான் இயேசுவைப் பிசாசு சோதித்தான்.—மாற் 1:12.

யோர்தான் ஆற்றின் மேற்கிலுள்ள யூதேயாவின் வனாந்தரம்
யோர்தான் ஆற்றின் மேற்கிலுள்ள யூதேயாவின் வனாந்தரம்

இந்தப் பொட்டல் பகுதியில், யோவான் ஸ்நானகர் தன் ஊழியத்தை ஆரம்பித்தார். இங்குதான் இயேசுவைப் பிசாசு சோதித்தான்.

ஆலயத்தின் உயரமான இடம்
ஆலயத்தின் உயரமான இடம்

சாத்தான் “ஆலயத்தின் உயரமான இடத்தில்” இயேசுவை உண்மையிலேயே நிற்க வைத்திருக்கலாம்; அங்கிருந்து குதிக்கும்படிதான் அவன் இயேசுவிடம் சொன்னதாகத் தெரிகிறது. ஆனால், சரியாக எந்த இடத்தில் இயேசு நின்றிருப்பார் என்று தெரியவில்லை. இங்கே ‘ஆலயம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை அந்த முழு வளாகத்தையும் குறித்திருக்கலாம். அதனால், இயேசு ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் (1) அல்லது ஆலய வளாகத்தின் வேறொரு மூலையில் நின்றிருக்கலாம். இதில் எந்த இடத்திலிருந்து குதித்திருந்தாலும் கண்டிப்பாக உயிர் போயிருக்கும், யெகோவா மட்டும் காப்பாற்றாமல் இருந்திருந்தால்!