கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 16:1-24

16  பரிசுத்தவான்களுக்காக நன்கொடை திரட்டுவது+ பற்றி கலாத்தியாவில் உள்ள சபைகளுக்கு நான் கொடுத்த ஆலோசனைகளின்படி நீங்களும் செய்யுங்கள்.  ஒவ்வொரு வாரத்தின் முதல்நாளிலும், நீங்கள் ஒவ்வொருவருமே உங்களுடைய வருமானத்துக்கு ஏற்றபடி ஏதாவது சேமித்து வையுங்கள். அப்படிச் செய்தால், நான் வந்த பின்பு நன்கொடைகளைத் திரட்ட வேண்டியிருக்காது.  நான் வந்த பின்பு, நம்பிக்கைக்குரியவர்கள் என்று கடிதம் மூலம் நீங்கள் எனக்குத் தெரியப்படுத்துகிற சகோதரர்களிடம்+ உங்கள் நன்கொடைகளை எருசலேமுக்குக் கொடுத்து அனுப்புவேன்.  நானும் அங்கே போவது நல்லதென்றால் போவேன்; அவர்கள் என்னோடு வருவார்கள்.  நான் மக்கெதோனியாவுக்குப்+ போகப்போகிறேன்; அங்கிருந்து உங்களிடம் வருவேன்.  ஒருவேளை உங்களோடு சில நாட்கள் தங்குவேன், அல்லது குளிர் காலம் முடியும்வரை தங்குவேன். அதன் பின்பு, சற்றுத் தூரம்வரை நீங்கள் என்கூடவே வந்து, நான் போகும் இடத்துக்கு என்னை வழியனுப்பி வையுங்கள்.  இப்போது, போகிற வழியில் வெறுமனே உங்களைப் பார்த்துவிட்டுப் போக நான் விரும்பவில்லை. யெகோவா* அனுமதித்தால், உங்களோடு சில காலம் தங்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.+  ஆனால், பெந்தெகொஸ்தே பண்டிகைவரை எபேசுவில்தான் இருப்பேன்;+  ஏனென்றால், ஊழியம் செய்வதற்கான வாய்ப்பு என்ற பெரிய கதவு எனக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது;+ ஆனால், எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். 10  தீமோத்தேயு+ அங்கே வந்தால், அவர் உங்களிடம் பயமில்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்; அவரும் என்னைப் போலவே யெகோவாவின்* வேலையைச் செய்துவருகிறார்.+ 11  அதனால், ஒருவரும் அவரை அற்பமாக நினைக்கக் கூடாது; நீங்கள் அவரைப் பத்திரமாக என்னிடம் அனுப்பி வையுங்கள்; சகோதரர்களோடு அவருக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். 12  நம்முடைய சகோதரரான அப்பொல்லோவைப்+ பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்; மற்ற சகோதரர்களோடு உங்களைப் பார்க்க வரும்படி நான் அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். ஆனால், இப்போது அங்கே வருகிற எண்ணம் அவருக்கு இல்லை; ஆனாலும், சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர் வருவார். 13  விழிப்புடன் இருங்கள்,+ விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருங்கள்,+ தைரியமாக* செயல்படுங்கள்,+ பலமடையுங்கள்.+ 14  எல்லாவற்றையும் அன்போடு செய்யுங்கள்.+ 15  சகோதரர்களே, ஸ்தேவனானுடைய வீட்டில் இருப்பவர்கள் அகாயாவில் முதன்முதலாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்* என்பதும், பரிசுத்தவான்களுக்குச் சேவை செய்ய தங்களையே அர்ப்பணித்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். 16  இப்படிப்பட்டவர்களுக்கும், இவர்களோடு ஒன்றுசேர்ந்து கடினமாக உழைக்கிற எல்லாருக்கும் நீங்கள் எப்போதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன்.+ 17  ஸ்தேவனான்,+ பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் இங்கே வந்திருப்பது எனக்குச் சந்தோஷம்; நீங்கள் இங்கே இல்லாத குறையை அவர்கள் தீர்த்திருக்கிறார்கள். 18  எனக்கும் உங்களுக்கும் புத்துணர்ச்சி தந்திருக்கிறார்கள்; அதனால், இப்படிப்பட்டவர்களை உயர்வாக மதியுங்கள். 19  ஆசியாவில் உள்ள சபைகள் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கின்றன. நம் எஜமானுடைய ஊழியர்களான உங்களுக்கு ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்களுடைய வீட்டில் கூடுகிற சபையோடு+ சேர்ந்து இதயப்பூர்வமாக வாழ்த்துச் சொல்கிறார்கள். 20  சகோதரர்கள் எல்லாரும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். சுத்தமான இதயத்தோடு ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து வாழ்த்துச் சொல்லுங்கள். 21  பவுலாகிய நான் என் கைப்பட எழுதி உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறேன். 22  ஒருவனுக்கு நம் எஜமான்மேல் பாசம் இல்லையென்றால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கட்டும். எங்கள் எஜமானே, வாருங்கள்! 23  நம் எஜமானாகிய இயேசுவின் அளவற்ற கருணை உங்கள்மீது இருக்கட்டும். 24  கிறிஸ்து இயேசுவின் சீஷர்களான உங்கள் எல்லாருக்கும் என் அன்பைத் தெரிவிக்கிறேன்.

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “ஆண்மகனாக.”
நே.மொ., “அகாயாவில் முதல் விளைச்சலாக இருந்தார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா