தீமோத்தேயுவுக்கு முதலாம் கடிதம் 1:1-20
1 நம்முடைய மீட்பராயிருக்கிற கடவுளும் நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கிறிஸ்து இயேசுவும்+ கட்டளை கொடுத்தபடி, கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல்,
2 உண்மையான மகனாகவும் சக விசுவாசியாகவும் இருக்கிற+ தீமோத்தேயுவுக்கு*+ எழுதுவது:
பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் உனக்கு அளவற்ற கருணையும் இரக்கமும் சமாதானமும் கிடைக்கட்டும்.
3 நான் மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டபோது எபேசுவில் தங்கியிருக்கச் சொல்லி உன்னை உற்சாகப்படுத்தியது போலவே இப்போதும் உற்சாகப்படுத்துகிறேன். ஏனென்றால், அங்கே இருக்கிற சிலர் பொய்க் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
4 அதோடு, கட்டுக்கதைகளுக்கும்+ வம்சாவளிப் பட்டியல்களுக்கும் கவனம் செலுத்துகிறார்கள். இவையெல்லாம் கடவுளுடைய விஷயங்களைப் போதித்து விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக வீண் கேள்விகளைத்தான் எழுப்புகின்றன.+ அதனால், இப்படிச் செய்யக் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிடு.
5 இந்தக் கட்டளையின் நோக்கம், சுத்தமான இதயத்தோடும் நல்ல மனசாட்சியோடும் வெளிவேஷமில்லாத விசுவாசத்தோடும் நாம் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான்.+
6 சிலர் இவற்றைவிட்டு விலகி, வீண்பேச்சு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.+
7 அவர்கள் திருச்சட்டப் போதகர்களாக+ இருப்பதற்கு விரும்புகிறார்கள். ஆனால், தாங்கள் எவற்றைச் சொல்கிறார்கள் என்பதையும், எவற்றைச் செய்ய வற்புறுத்துகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.
8 திருச்சட்டம் நல்லது என்பது நமக்குத் தெரியும். ஆனால், ஒருவர் அதைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
9 நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நீதிமான்களுக்காகச் சட்டம் இயற்றப்படுவதில்லை; அதற்குப் பதிலாக, அக்கிரமக்காரர்கள்,+ அடங்காதவர்கள், கடவுள்பக்தி இல்லாதவர்கள், பாவிகள், உண்மையில்லாதவர்கள்,* பரிசுத்தமானவற்றை அவமதிக்கிறவர்கள், அப்பா அம்மாவையோ மற்றவர்களையோ கொலை செய்கிறவர்கள்,
10 பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள், ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள், ஆட்களைக் கடத்துகிறவர்கள், பொய் சொல்கிறவர்கள், கொடுத்த வாக்கை மீறுகிறவர்கள்* ஆகியோருக்காகவும், பயனுள்ள* போதனைகளுக்கு+ எதிரான எல்லா செயல்களையும் செய்கிறவர்களுக்காகவும்தான் சட்டம் இயற்றப்படுகிறது.
11 பயனுள்ள இந்தப் போதனைகள், சந்தோஷமுள்ள கடவுள் என்னிடம் ஒப்படைத்திருக்கிற மகத்தான நல்ல செய்திக்கு இசைவாக இருக்கின்றன.+
12 என்னைப் பலப்படுத்திய நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவுக்கு நன்றியோடு இருக்கிறேன். ஏனென்றால், அவர் என்னை உண்மையுள்ளவன் என்று கருதி, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு என்னை நியமித்தார்.+
13 முன்பு நான் துன்புறுத்துகிறவனாகவும், கடவுளை நிந்திக்கிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும் இருந்தேன்.+ ஆனாலும், அறியாமையின் காரணமாக நான் விசுவாசமில்லாமல் நடந்துகொண்டதால் அவர் என்மேல் இரக்கம் காட்டினார்.
14 நம் எஜமானுடைய அளவற்ற கருணை எனக்குத் தாராளமாகக் கிடைத்தது; அதோடு, விசுவாசமும் கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள அன்பும் எனக்குள் அதிகமானது.
15 பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்துக்கு வந்தார்+ என்ற வார்த்தை உண்மையானது, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. அந்தப் பாவிகளில் பெரும் பாவி நான்தான்.+
16 ஆனாலும், கிறிஸ்து இயேசுமேல் விசுவாசம் வைத்து முடிவில்லாத வாழ்வைப்+ பெறப்போகிறவர்களுக்கு நான் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்படி, அவர் என்மேல் பொறுமையை முழுமையாகக் காட்டினார், பெரும் பாவியாகிய என்மேல் இரக்கத்தைக் காட்டினார்.
17 என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.*
18 தீமோத்தேயு, என் பிள்ளையே, உன்னைப் பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களுக்கு ஏற்ப நான் உனக்கு இவற்றைக் கட்டளையிடுகிறேன். அந்தத் தீர்க்கதரிசனங்களை நீ மனதில் வைத்து, சிறந்த போராட்டத்தைப் போராடிக்கொண்டே+ இருக்க வேண்டும் என்பதற்காகவும்,
19 விசுவாசத்தையும் நல்ல மனசாட்சியையும் நீ காத்துக்கொள்ள வேண்டும்+ என்பதற்காகவும் இவற்றைக் கட்டளையிடுகிறேன்; இவற்றைச் சிலர் ஒதுக்கிவிட்டு தங்களுடைய விசுவாசக் கப்பலை மூழ்கடித்திருக்கிறார்கள்.
20 இமெனேயுவும்+ அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்தான். அவர்களை நான் சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன்.+ கடவுளை நிந்திக்கக் கூடாது என்ற பாடத்தை அவர்களுக்குக் கொடுக்கப்படும் கண்டிப்பிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தேன்.
அடிக்குறிப்புகள்
^ அர்த்தம், “கடவுளுக்கு மரியாதை கொடுப்பவன்.”
^ வே.வா., “மாறாத அன்பு இல்லாதவர்கள்.”
^ வே.வா., “ஆரோக்கியமான.”
^ வே.வா., “பொய் சத்தியம் செய்கிறவர்கள்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ அதாவது, “அப்படியே ஆகட்டும்.”