பேதுருவின் இரண்டாம் கடிதம் 3:1-18
3 அன்பானவர்களே, இப்போது நான் உங்களுக்கு எழுதுவது இரண்டாவது கடிதம். என்னுடைய முதல் கடிதத்தைப் போலவே இந்தக் கடிதத்தின் மூலமும் சில விஷயங்களை ஞாபகப்படுத்தி, தெளிவாக யோசிக்கும் உங்கள் திறனைத் தூண்டியெழுப்புகிறேன்.+
2 பரிசுத்த தீர்க்கதரிசிகள் முன்கூட்டியே சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல, நம் எஜமானாகவும் மீட்பராகவும் இருக்கிறவர் அப்போஸ்தலர்கள் மூலம் கொடுத்த கட்டளைகளையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் செய்கிறேன்.
3 முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான்: கடைசி நாட்களில், கேலி செய்கிறவர்கள் மக்கள் மத்தியில் வருவார்கள். அவர்கள் தங்களுடைய ஆசைகளின்படி நடந்து,+
4 “அவர் வருவதாக வாக்குக் கொடுத்தாரே, அவர் எங்கே?+ நம் முன்னோர்களும் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்.* உலகம் உண்டான காலத்திலிருந்தே எல்லாம் அப்படியேதான் இருக்கிறது”+ என்று சொல்லிக் கேலி செய்வார்கள்.
5 பல காலத்துக்கு முன்னால் கடவுளுடைய வார்த்தையால் வானமும் பூமியும் உண்டாயின என்பதையும், பூமி தண்ணீரிலிருந்து மேலே எழும்பித் தண்ணீருக்கு நடுவில் உறுதியாக நின்றது+ என்பதையும்,
6 அவற்றினால் அப்போது இருந்த உலகம் பெரிய வெள்ளத்தால் அழிந்தது+ என்பதையும் அவர்கள் நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்.
7 இப்போது இருக்கிற வானமும் பூமியும் அதே வார்த்தையால் நெருப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றன, கடவுள்பக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகிற+ நாளுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
8 ஆனாலும் அன்பானவர்களே, யெகோவாவுக்கு* ஒரு நாள் ஆயிரம் வருஷங்கள் போலவும், ஆயிரம் வருஷங்கள் ஒரு நாள் போலவும் இருக்கிறது+ என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
9 யெகோவா* தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றத் தாமதிப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர் தாமதிப்பதில்லை.+ ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.+ அதனால்தான் உங்கள்மேல் பொறுமையாக இருக்கிறார்.
10 ஆனாலும், யெகோவாவின்* நாள்+ திருடன் வருவதுபோல் வரும்.+ அப்போது, வானம் பயங்கர சத்தத்தோடு மடமடவென்று ஒழிந்து போய்விடும்;+ கடும் வெப்பத்தில் மூலப்பொருள்கள் அழிந்துவிடும், பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் எரிந்து நாசமாகும்.*+
11 இவையெல்லாம் அழியப்போவதால், நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் கடவுள்பக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்!
12 அதேசமயத்தில், யெகோவாவின்* நாளை*+ எப்போதும் மனதில் வைத்து* அதற்காக எந்தளவுக்கு ஆவலோடு காத்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும்! அந்த நாளில் வானம் எரிந்து அழிந்துபோகும்,+ மூலப்பொருள்கள் கடும் வெப்பத்தில் உருகிப்போகும்.
13 ஆனால், அவருடைய வாக்குறுதியின்படியே நீதி குடியிருக்கிற+ புதிய வானமும் புதிய பூமியும்+ உண்டாகுமென்று ஆவலோடு காத்திருக்கிறோம்.
14 அதனால் அன்பானவர்களே, இவையெல்லாம் வருவதற்கு நீங்கள் ஆவலோடு காத்திருப்பதால், அவர் முன்னால் கறையில்லாதவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும்+ காணப்படுவதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.
15 அதோடு, நம் எஜமானுடைய பொறுமை நமக்கு மீட்பு என்று எண்ணுங்கள். நம்முடைய அன்புச் சகோதரராகிய பவுலும் தனக்குக் கொடுக்கப்பட்ட ஞானத்தால் இதைத்தான் உங்களுக்கு எழுதினார்.+
16 சொல்லப்போனால், தன்னுடைய எல்லா கடிதங்களிலும் இவற்றைப் பற்றித்தான் எழுதினார். ஆனாலும், அவர் எழுதியவற்றில் சில விஷயங்கள் புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருக்கின்றன. சரியான புரிந்துகொள்ளுதல் இல்லாதவர்களும்* உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவசனங்களைத் திரித்துச் சொல்வதுபோல் இவற்றையும் திரித்துச் சொல்லி, தங்களுக்கே அழிவை வரவழைத்துக்கொள்கிறார்கள்.
17 அன்பானவர்களே, இவற்றைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருக்கிறீர்கள்; அதனால், அந்த அக்கிரமக்காரர்கள் சொல்கிற தவறான கருத்துகளால் கவர்ந்திழுக்கப்பட்டு நிலைதடுமாறிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+
18 நம்முடைய எஜமானும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணையிலும் அவரைப் பற்றிய அறிவிலும் வளர்ந்துகொண்டே இருங்கள். இன்றும் என்றும் அவருக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.*
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “முன்னோர்களும் தூங்கிவிட்டார்கள்.”
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ நே.மொ., “வெட்டவெளிச்சமாக்கப்படும்.”
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ நே.மொ., “நாளின் பிரசன்னத்தை.”
^ வே.வா., “ஆசையாக எதிர்பார்த்து.” நே.மொ., “விரைவாக்கி.”
^ வே.வா., “கற்பிக்கப்படாதவர்களும்.”
^ அதாவது, “அப்படியே ஆகட்டும்.”